ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்டுகளுக்கு நிம்மதி: வணிக எல்பிஜி விநியோகத்தை 20% அதிகரித்தது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் நிலவி வந்த எரிசக்தி தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில், வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை மேலும் 20% அதிகரிக்க மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 21) ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கான ஒட்டுமொத்த விநியோகம், நெருக்கடிக்கு முந்தைய கால அளவில் 50% ஐ எட்டியுள்ளது. இந்த கூடுதல் ஒதுக்கீடு வரும் மார்ச் 23, 2026 முதல் அமலுக்கு வருகிறது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
முன்னுரிமை
யாருக்கெல்லாம் முன்னுரிமை அளிக்கப்படும்?
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் நீரஜ் மிட்டல் அனைத்து மாநிலங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், இந்த கூடுதல் 20% விநியோகம் கீழ்க்கண்ட துறைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். உணவகங்கள், தாபாக்கள் மற்றும் ஹோட்டல்கள், தொழிற்சாலை கேன்டீன்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் மையங்கள், பால் பண்ணைகள் மற்றும் அரசு நடத்தும் மானிய விலைக் உணவகங்கள், சமூக சமையலறைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள்.
கட்டுப்பாடுகள்
புதிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள்
கூடுதல் கேஸ் விநியோகத்தைப் பெற விரும்பும் வணிகப் பயனர்கள் பின்வரும் சில முக்கிய நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்: பதிவு செய்தல்: அனைத்து வணிகப் பயனர்களும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் எந்தத் துறை, எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் ஆண்டுத் தேவை எவ்வளவு போன்ற விபரங்களை அளிக்க வேண்டும். பிஎன்ஜி இணைப்பு கட்டாயம்: கூடுதல் எல்பிஜி பெற விரும்பும் நிறுவனங்கள், தங்கள் பகுதியில் உள்ள 'சிட்டி கேஸ் விநியோக' அமைப்பிடம் குழாய் மூலம் வரும் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) இணைப்பிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். முறைகேடு தடுப்பு: வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ், வீட்டுத் தேவைகளுக்குத் திசைதிருப்பப்படாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
முடிவின் காரணம்
ஏன் இந்த அதிரடி முடிவு?
கடந்த சில மாதங்களாக நிலவி வந்த எரிசக்தி நெருக்கடியால் ஹோட்டல் மற்றும் உணவுத் தொழில் துறையினர் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த கூடுதல் ஒதுக்கீடு உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், சிறு வணிகர்களுக்கு உதவவும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீண்ட காலத் தீர்வாக வணிக நிறுவனங்களைப் பிஎன்ஜி முறைக்கு மாற்றவும் அரசு இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறது.