புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு
ஒரு டன் 1200 டாலருக்கும் குறைவாக வெளிநாடுகளுக்கு விற்கப்படும் பாஸ்மதி அரிசி சரக்குகளின் ஏற்றுமதியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் அந்த விலை வரம்புக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஏற்றுமதிகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் பாஸ்மதி ஏற்றுமதியை கட்டுக்குள் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 2022-2023ல் 4.79 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாஸ்மதி அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. இதில் பெரும்பாலான ஏற்றுமதி மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, விலையை கட்டுக்குள் வைக்க, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை, புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20% கூடுதல் வரி போன்ற நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.
இந்திய தடையால் பாகிஸ்தானுக்கு லாபம்
மொத்த நுகர்வோர் பணவீக்க விகிதம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44% ஆக அதிகரித்துள்ளதால், அதிக உணவுப் பணவீக்கத்தின் பின்னணியில் தானியங்கள் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளின் முழு வரம்பையும் அரசாங்கம் இப்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. புதிய விதிமுறைகள் பாஸ்மதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்வதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இது பாஸ்மதியை அதிகம் உற்பத்தி செய்யும் பாகிஸ்தானுக்கு கூடுதல் நன்மையை கொடுக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்திய அரசின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடு சர்வதேச அளவில் அரிசி விலையை மேலும் அதிகரிக்க செய்யும் எனக் கூறப்படுகிறது.