பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவைக் குழு
அடுத்த மாதம் விஷ்வகர்மா ஜெயந்தியின் போது, புதிய விஷ்வகர்மா திட்டத்தை தொடங்கவிருப்பதாக நேற்று செங்கோட்டையில் சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது இந்தப் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 18 வகையான தொழிலைச் செய்பவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பலனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் தொழில்களுக்கு சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், கடன் வசதி உள்ளிட்டவை வழங்கப்படவிருக்கின்றன.
பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டம்:
இந்தத் திட்டத்தின் கீழ், 5% என்ற குறைவான வட்டி வகிதத்தில் முதலில் ரூ.1 லட்சம் வரையிலான கடனுதவியும், பின்னர் ரூ.2 லட்சம் வரையிலான கடனுதவியும் வழங்கப்படவிருக்கிறது. மேலும், ஒருவர் தன்னுடைய தொழில்திறனை முன்னேற்றுவதற்குத் தேவயான பயிற்சிகள், தொழிலுக்கு தேவயான கருவிகளை வாங்குவதற்காக ஊக்கத்தொகை, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்துதலுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்படவிருக்கின்றன. முதல் கட்டமாக, இந்த விஷ்வகர்மா திட்டத்தின் கீழ், தச்சர்கள், படகு தயாரிப்பாளர்கள், கொல்லர்கள், பூட்டுத் தொழிலாளர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள், செருப்புத் தொழிலாளர்கள் மற்றும் கொத்தனார்கள் உள்ளிட்டோர் பயனடையவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.