புதிய தொழிற்சாலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் ரூ.7,108 கோடி முதலீடு செய்யவுள்ள 8 புதிய நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கூட்டம் நடந்து முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, 'தொழில் வளர்ச்சியானது தமிழகத்தில் மிகபெரிய அளவில் முன்னேறியுள்ளது' என்றும், 'புதிய நிறுவனங்களுக்கு தொகுப்பு சதவிகித சலுகை வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டது' என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, 8 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 22,536 வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு துறைமுக மேம்பாட்டு கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்
ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் கண்ணாடி பொருட்கள், மின்வாகன பாகங்கள், காலணி உற்பத்தி, விண்வெளி, ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யவுள்ளது. இதன்படி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஓர் கூட்டு முயற்சியாக ஏரோ எஞ்சின் பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை ஓசூர் பகுதியில் துவங்கவுள்ளது. மேலும், ஐகால் டெக், அக்கொடிஸ், ஹங்ஃபு, உள்ளிட்ட நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையினை துவங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு துறைமுக மேம்பாட்டு கொள்கை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.