கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி: போர் காலத்திற்கு முந்தைய நிலைக்குச் சென்ற பிரெண்ட் குரூட் ஆயில்!
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த பதற்றங்கள் தணிந்து, எண்ணெய் விலையானது அமெரிக்கா - ஈரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலைக்குக் கீழ் சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கணிசமாக மேம்பட்டுள்ளதாலும், அமெரிக்கா - ஈரான் இடையே சாத்தியமான அமைதி ஒப்பந்தம் குறித்த சாதகமான சூழல் நிலவுவதாலும் வியாழக்கிழமையன்று (ஜூன் 25) எண்ணெய் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
விலை சரிவு
$72 டாலராக சரிந்த பிரெண்ட் கச்சா எண்ணெய்
சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் முதன்மை அளவுகோலான பிரெண்ட் குரூட் ஆயில் விலை 1.52% க்கும் மேல் சரிந்து பேரல் ஒன்று $72.4 டாலராகக் குறைந்துள்ளது. அதேபோல், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை 1.43% சரிந்து பேரல் ஒன்று $69.3 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. முந்தைய வர்த்தக அமர்வில் ஏற்பட்ட 4% சரிவைத் தொடர்ந்து, தற்பொழுது போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த அதே விலைக்கு எண்ணெய் வர்த்தகம் திரும்பியுள்ளது.
இயல்பு நிலை
ஹார்முஸ் ஜலசந்தியில் திரும்பிய இயல்பு நிலை
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் நல்லதொரு அடித்தளத்தை உருவாக்கியுள்ளதாக இரு தரப்பும் சிக்னல் கொடுத்துள்ளன. இதன் மிக முக்கியப் பிரதிபலிப்பாக, உலக எண்ணெய் போக்குவரத்தின் இதயப் பகுதியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஆயில் டேங்கர் கப்பல்கள் தங்களது சாட்டிலைட் டிராக்கிங் சிஸ்டம்களை ஆன் செய்து கொண்டு தடையின்றிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. பல மாத காலப் போக்குவரத்துக் முடக்கத்திற்குப் பிறகு இந்த முக்கிய நீர்வழிப் பாதை தற்பொழுது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
அமெரிக்கா
சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் சப்ளை மற்றும் அமெரிக்காவின் தற்காலிக விலக்கு
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கத் தயாரிப்பாளர்களிடமிருந்து உலகளாவிய வாங்குபவர்களுக்குக் கூடுதல் கச்சா எண்ணெய் ஆஃபர்கள் தற்பொழுது தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளன. இதுமட்டுமின்றி, ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளில் இருந்து அமெரிக்கா தற்காலிக விலக்கு அளித்துள்ளதால், ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரான் நாட்டு எண்ணெயும் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால், சந்தையில் நிலவி வந்த உடனடிப் பற்றாக்குறை அச்சுறுத்தல் முழுமையாக நீங்கியுள்ளது.
பற்றாக்குறை அபாயம்
இன்னும் முழுமையாக நீங்காத உள்நாட்டுப் பற்றாக்குறை அபாயம்
எண்ணெய் விலைகள் சரிந்து நுகர்வோருக்கு நிம்மதி அளித்து வந்தாலும், சந்தை இன்னும் முழுமையான பாதுகாப்பான நிலையை எட்டவில்லை என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். போர்க் காலத்தில் ஏற்பட்ட விநியோகத் தடையைச் சமாளிக்க, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது அவசரக்கால இருப்பு வைப்பு நிதியிலிருந்து பெருமளவு எண்ணெயைப் பயன்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஒக்லஹாமாவின் குஷிங் மையத்தில் கச்சா எண்ணெய் இருப்பு 19 மில்லியன் பேரல்களாகக் குறைந்துள்ளது, இது சந்தையின் சீரான செயல்பாட்டிற்குத் தேவையான குறைந்தபட்ச அளவை விடக் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.