பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள்.. கொதித்தெழுந்த சமூக வலைத்தளவாசிகள்!
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு ஏவுகணைத் தாக்குதல் தொடுத்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. உலகளவில் பல நாடுகள் இஸ்ரேலுக்கும், சில நாடுகள் பாலஸ்தீனத்துக்கும் ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன.
உலக மக்களும் தங்களுடைய ஆதரவு நிலைப்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்பக்ஸ் (Starbucks) நிறுவனத்தின் 9,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்று சேர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இது குறித்து ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியர்களின் ஒருங்கிணைந்த எக்ஸ் கணக்கிலிருந்து பாலஸ்தீன ஆதரவு பதிவு ஒன்றும் பதிவிடப்பட்டிருக்கிறது. ஸ்டார்பக்ஸ் ஊழியர்களின் நிலைப்பாட்டிற்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
ஸ்டார்பக்ஸ்
நெட்டிசன்கள் எதிர்ப்பு:
பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள் மற்றும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக உலகளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இணையதள வாசிகளும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், ஸ்டார்பக்ஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறி #boycottstarbucks என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்டு செய்து வருகிறார்கள். சமூக வலைத்தளவாசிகளின் இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து மேற்கூறிய ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள் எக்ஸ் பக்கத்திலிருந்து பாலஸ்தீனதுத்து ஆதரவான பதிவு நீக்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டார்பக்ஸ் நிறுவனம், தங்களது ஊழியர்களின் நிலைப்பாட்டைக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டிருப்பதோடு, ஊழியர்களின் நிலைப்பாட்டிற்கும், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் நிலைப்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்டார்பக்ஸ் ஊழியர்களுக்கென தனிப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்பு எதுவும் இல்லை எனவும் விளக்கமளித்திருக்கிறது ஸ்டார்பக்ஸ்.