LOADING...
"10 நிமிட டெலிவரி" இனி கிடையாது! மத்திய அரசின் அதிரடி தலையீட்டால் பிளிங்கிட் முடிவு
"10 நிமிட டெலிவரி" என்ற விளம்பர முறையை நீக்க முடிவு செய்துள்ளது Blinkit

"10 நிமிட டெலிவரி" இனி கிடையாது! மத்திய அரசின் அதிரடி தலையீட்டால் பிளிங்கிட் முடிவு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 13, 2026
02:28 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து, ஆன்லைன் மூலம் பொருட்களை விநியோகிக்கும் பிளிங்கிட் (Blinkit) நிறுவனம், தனது வர்த்தக முத்திரையாக விளங்கிய "10 நிமிட டெலிவரி" என்ற விளம்பர முறையை நீக்க முடிவு செய்துள்ளது. டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கவலைகள் மற்றும் அவர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அண்மையில் பிளிங்கிட், செப்டோ (Zepto), ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, மிகக் குறுகிய காலத்திற்குள் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்ற கட்டாயத்தால் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வலியுறுத்தல்

அமைச்சரின் வலியுறுத்தலை அடுத்து Blinkit முடிவு

இந்த சந்திப்பின் போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளை நீக்குமாறு நிறுவனங்களை அமைச்சர் வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தங்களின் சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் விளம்பரங்களில் இருந்து "நேரக் கட்டுப்பாடு" தொடர்பான வாக்குறுதிகளை நீக்குவதாக உறுதி அளித்துள்ளன. இதன் முதற்கட்டமாக பிளிங்கிட் நிறுவனம் தனது பிராண்டிங் செய்திகளிலிருந்து "10-நிமிட டெலிவரி" என்ற வாசகத்தை அகற்றத் தொடங்கியுள்ளது. கிக் தொழிலாளர்களின் (Gig workers) நலனைப் பாதுகாக்கவும், சாலை விபத்துகளைக் குறைக்கவும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில், குறிப்பிட்ட நேரத்திற்குப் பதிலாக, பாதுகாப்பு மற்றும் தரமான சேவையே முன்னிலைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement