Loading...
பினான்ஸ் தளத்தில் $6.3 பில்லியன் ஹேக்கிங்: கிரிப்டோ வரலாற்றில் மிகப்பெரிய சைபர் தாக்குதல்; முழு விபரம்
பினான்ஸ் தளத்தில் $6.3 பில்லியன் ஹேக்கிங்

பினான்ஸ் தளத்தில் $6.3 பில்லியன் ஹேக்கிங்: கிரிப்டோ வரலாற்றில் மிகப்பெரிய சைபர் தாக்குதல்; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 30, 2026
10:44 am

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணி கிரிப்டோ பரிவர்த்தனை நிறுவனமான பினான்ஸ், தனது தளத்தில் பாதுகாப்பு மீறல் ஏற்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின் படி, இத்தாக்குதலால் சுமார் $6.3 பில்லியன் (சுமார் ₹53,000 கோடி) மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-இல் பைபிட் தளத்தில் நடந்த $1.5 பில்லியன் ஹேக்கிங்கை விட இதுவே உலகிலேயே மிகப்பெரிய கிரிப்டோ திருட்டாகப் பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் உலகளவில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம்

ஹேக்கிங் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது மற்றும் காரணம் என்ன?

பினான்ஸ் நிறுவனத்தின் DevOps பொறியாளர் ஒருவரின் மடிக்கணினி ஹேக்கர்களால் ஊடுருவப்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது.

இதன் மூலம் சர்வர் கன்டெய்னர்களை அணுகிய ஹேக்கர்கள், தன்னிச்சையான முறையற்ற பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளனர்.

இருப்பினும், பயனர்களின் கிரிப்டோ வாலட் தனியார் சாவிக்கான (Private Keys) ரகசியக் குறியீடுகள் எதுவுமே கசியவில்லை என்றும், வாலட்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பினான்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

விசாரணைகள் முடிந்த பின் விரிவான அறிக்கை வெளியிடப்படும் என பினான்ஸ் கூறியுள்ளது.

இழப்பீடு உத்தரவாதம்

$3 பில்லியன் நிதிகள் முடக்கம் மற்றும் இழப்பீடு உத்தரவாதம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பினான்ஸ் தற்காலிகமாக பணப்பரிமாற்றம் மற்றும் டெபாசிட்களை நிறுத்தி வைத்துள்ளது.

உலகின் பிற பிளாக்செயின் கூட்டாளர்களுடன் இணைந்து இதுவரை $3 பில்லியன் மதிப்பிலான நிதிகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு 'SAFU' (Secure Asset Fund for Users) அவசரகால காப்பீட்டு நிதி மற்றும் நிறுவனத்தின் சொந்த நிதியைப் பயன்படுத்தி 100% இழப்பீடு வழங்கப்படும் என பினான்ஸ் உறுதியளித்துள்ளது.

பயனர்களின் நிதிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

பிட்காயின் வீழ்ச்சி

கிரிப்டோ சந்தையில் கடும் அதிர்வலைகளும் பிட்காயின் வீழ்ச்சியும்

இந்த செய்தி வெளியானதுமே கிரிப்டோ சந்தையில் பெரும் பீதி ஏற்பட்டு பிட்காயின் விலை 5% வரை சரிந்து, $77,000-க்குக் கீழ் குறைந்தது.

அதேபோல ஈத்ரியம், சொலானா மற்றும் பிஎன்பி நாணயங்களின் மதிப்புகளும் சரிவைக் கண்டன.

பிற கிரிப்டோ நிறுவனங்களான டெதர் $1.6 பில்லியனையும், சர்க்கிள் $800 மில்லியனையும் உடனடி நடவடிக்கையாக முடக்கி, ஹேக்கர்கள் நிதியைத் திசைதிருப்புவதை தடுத்துள்ளன.

இந்த சம்பவத்தால் சர்வதேச அளவிலான டிஜிட்டல் நிதிச் சந்தை நிலைகுலைந்துள்ளது.

ADVERTISEMENT