7 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு வெற்றி: ஜெட் ஏர்வேஸ் முன்னாள் ஊழியர்களுக்கு ₹480 கோடி பணிக்கொடை வழங்க NCLAT உத்தரவு
செய்தி முன்னோட்டம்
பல ஆண்டுகால நிச்சயமற்ற நிலை மற்றும் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணிக்கொடைத் தொகையை வட்டியுடன் சேர்த்து 2 வாரங்களுக்குள் விடுவிக்குமாறு தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (NCLAT) உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 7 ஆண்டுகளாகத் தங்கள் சட்டப்பூர்வ பலன்களுக்காக போராடி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. மொத்தமாக சுமார் ₹480 கோடி மதிப்பிலான இந்தத் தொகையில் பணிக்கொடையை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்த வேண்டும் என்றும் வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகளை பிஎஃப் அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்ட கணக்குகளில் வரவு வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நெருக்கடி
2019-ல் தொடங்கிய ஜெட் ஏர்வேஸ் நெருக்கடியும் பிப்ரவரி 2026 NCLT தீர்ப்பும்
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிதிப் பற்றாக்குறை காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவைகளை நிறுத்தியது முதல் ஊழியர்களின் நெருக்கடி தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து கடன் வழங்கிய வங்கிகளின் கோரிக்கையின் பேரில் திவால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட நிலையில் ஊழியர்கள் தங்கள் சம்பளம் மற்றும் பணிக்கொடைக்காக 7 ஆண்டுகளாகப் போராடி வந்தனர்.
இதற்கிடையே 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 அன்று தீர்ப்பளித்த தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் ஊழியர்களின் பிஎஃப் மற்றும் பணிக்கொடைத் தொகைகள் நிறுவனத்தின் கலைப்பு சொத்துக்களில் சேராது என்றும் அவற்றை லிக்விடேட்டர் கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேல்முறையீடு தள்ளுபடி
வங்கிகளின் மேல்முறையீடு தள்ளுபடியும் 1,656 நாட்கள் விலக்கு அளித்த வரலாற்று உத்தரவும்
முன்னதாக பிப்ரவரி மாதத் தீர்ப்பை எதிர்த்து எஸ்பிஐ உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த ஜூன் 2026-ல் தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
மேலும் ஊழியர்களின் நிலுவைத் தொகைக்கான 24 மாதக் காலத்தைக் கணக்கிடும்போது நீதிமன்ற வழக்குகளில் செலவிடப்பட்ட 1,656 நாட்களைக் கழித்துக்கொள்ளவும் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.
பணிக்கொடை சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் பணிக்கொடை பெறத் தகுதியுடையவர்கள் என்ற நிலையில் இன்றைய உத்தரவு ஊழியர்களுக்கு மாபெரும் வெற்றியாக அமைந்துள்ளது.