பாரத் மார்ட்: UAE -இல் இந்தியா திறக்கவுள்ள வேர்ஹவுஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு சென்றுள்ளார். அவரின் வருகையின் போது இரு நாடுகளுக்குண்டான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது. அதே நேரத்தில், இந்தியா தனது சொந்த கிடங்கு வசதியான பாரத் மார்ட்டை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிறுவ திட்டமிட்டுள்ளது. இது சீனாவின் 'டிராகன் மார்ட்' போன்று, ஏற்றுமதியாளர்கள் ஒரே கூரையின் கீழ் பல்வேறு வகையான பொருட்களை காட்சிப்படுத்த ஒரு ஒருங்கிணைந்த தளத்தை வழங்குகிறது. பாரத் மார்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை: பாரத் மார்ட்டில், சில்லறை விற்பனைக் காட்சியறைகள், கிடங்குகள், அலுவலகங்கள் மற்றும் பிற துணை வசதிகள் உள்ளன. இன்னும் முழுவதும் வடிவம் பெறாத இந்த திட்டம், வரும் 2025க்குள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யவும் வசதி
பாரத் மார்ட் 100,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டிருக்கும் மற்றும் கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் பிரிவுகளின் கலவையை வழங்கும் பல்நோக்கு வசதியாக செயல்படும். பாரத் மார்ட், டிபி வேர்ல்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஜெபல் அலி ஃப்ரீ ஸோனில் (ஜாஃப்சா) அமைக்கப்படும். மேலும், உலகெங்கிலும் உள்ள கஸ்டமர்களுக்கு, இந்த வசதியிலிருந்து பொருட்களை வாங்க ஏதுவாக டிஜிட்டல் தளத்தை நிறுவும் திட்டம் உள்ளது. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளும் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ் பெட்ரோலியம் அல்லாத வர்த்தக இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்க இலக்கு வைத்துள்ளதால், இந்த பாரத் மார்ட் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என கருதப்படுகிறது.