வங்கிப் பணிகள் பாதிக்கும் அபாயம்! ஜனவரி 27 நாடு தழுவிய வேலைநிறுத்தம்! 5 நாள் வேலைக்கு அனுமதி கிடைக்குமா?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU), வரும் ஜனவரி 27 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற தங்களது நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ நோட்டீஸை இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் நிதி அமைச்சகத்திடம் சங்கங்கள் சமர்ப்பித்துள்ளன.
பின்னணி
5 நாள் வேலை கோரிக்கையின் பின்னணி
வங்கி ஊழியர்களின் இந்த கோரிக்கை 2015 ஆம் ஆண்டிலிருந்தே நிலுவையில் உள்ளது. தற்போது மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மட்டுமே விடுமுறை நாட்களாக உள்ளன. டிசம்பர் 2023 மற்றும் மார்ச் 2024 ஆகிய தேதிகளில் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஊழியர் சங்கங்களுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவிக்க இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்தது. இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புதல் அளித்த போதிலும், மத்திய அரசும் நிதிச் சேவைகள் துறையும் இதற்கான இறுதி அனுமதியை வழங்க இன்னும் முன்வரவில்லை. இதனால் கடந்த 9 மாதங்களாக எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாற்றம்
வேலைநேர மாற்றம்
சங்கங்களின் அறிவிப்புப்படி, வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டால், வாரத்தின் மொத்த வேலை நேரத்தைக் குறைக்காமல் இருக்க தினமும் 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்ய ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ரிசர்வ் வங்கி, எல்ஐசி மற்றும் அரசு அலுவலகங்களில் ஏற்கனவே 5 நாள் வேலை நடைமுறை இருக்கும்போது, தங்களுக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
போராட்டம்
போராட்டத்தின் கால அட்டவணை
வேலைநிறுத்தத்திற்கு முன்னதாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை UFBU திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 26 நள்ளிரவு முதல் ஜனவரி 27 நள்ளிரவு வரை வேலைநிறுத்தம் நடைபெறும். அதற்கு முன்னதாக சமூக வலைதளப் பிரச்சாரங்கள், பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தல் மற்றும் மாநிலத் தலைநகரங்களில் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தப்படும். நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பேரணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. ஜனவரி 27-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெற்றால், பணப் பரிவர்த்தனை, காசோலை மற்றும் இதர வங்கிச் சேவைகள் நாடு முழுவதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அரசு மற்றும் வங்கிகள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கத் தவறினால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள்.