15 ஆண்டுகளுக்குப் பிறகு மாறும் ஆப்பிள் நிறுவன தலைமை; டிம் குக்கிற்கு பதில் வரும் யார் இந்த ஜான் டெர்னஸ்?
செய்தி முன்னோட்டம்
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவனான ஆப்பிள் (Apple Inc.), தனது தலைமைப் பொறுப்பில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வந்த டிம் குக், தலைமைச் செயல் அதிகாரி(CEO) பதவியிலிருந்து விலகுகிறார். அவருக்கு பதிலாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்த ஜான் டெர்னஸ் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தலைமை மாற்றம் வரும் செப்டம்பர் 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2011-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸிற்குப் பிறகு ஆப்பிள் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்ற டிம் குக், அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை சுமார் 3.6 டிரில்லியன் டாலர்கள் வரை உயர்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவரங்கள்
யார் இந்த ஜான் டெர்னஸ்?
50 வயதான ஜான் டெர்னஸ், 2001-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். கடந்த 25 ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பின்னணியில் ஒரு முக்கியத் தூணாகச் செயல்பட்டு வருகிறார். மேக், ஐபேட், ஏர்பாட்ஸ் மற்றும் சமீபத்திய விஷன் ப்ரோ ஹெட்செட் உள்ளிட்ட ஆப்பிளின் முதன்மை தயாரிப்புகளின் வடிவமைப்பில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இன்ஜினியரிங் பின்னணி கொண்ட ஒரு தயாரிப்பு நிபுணரைத் தலைவராக நியமிப்பதன் மூலம், ஆப்பிள் மீண்டும் 'ஹார்டுவேர் இன்னோவேஷன்' நோக்கித் திரும்புவதை இது காட்டுகிறது. ஜான் டெர்னஸ் தலைமையிலான ஆப்பிள், வரும் காலங்களில் AI மற்றும் செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Apple சாதனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை இன்னும் ஆழமாகப் புகுத்தும் பொறுப்பு டெர்னஸிடம் உள்ளது.