ஒரு பக்கம் 16,000 பேர் பணிநீக்கம், மறுபக்கம் பில்லியன் கணக்கில் OpenAI-யில் முதலீடு: அமேசானின் இரட்டை வியூகம்
செய்தி முன்னோட்டம்
உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், செலவுகளை குறைக்கும் பொருட்டு சமீபத்தில் 16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஆனால், அதே சமயம் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான ஏஐ (AI) துறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய முதலீட்டை செய்யத் தயாராகி வருகிறது. சாட் ஜிபிடி (ChatGPT) மூலம் உலகப் புகழ்பெற்ற ஓபன் ஏஐ நிறுவனத்தில் $50 பில்லியன் வரை முதலீடு செய்ய அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமேசான் CEO ஆண்டி ஜாஸி மற்றும் ஓபன் ஏஐ CEO சாம் ஆல்ட்மேன் ஆகியோர் நேரடியாக இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முதலீடு உறுதியானால், ஓபன் ஏஐ-யின் மிகப்பெரிய முதலீட்டாளராக அமேசான் மாறும்.
காரணம்
ஏன் இந்த முதலீடு?
மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்குப் போட்டியாக, ஏஐ சந்தையில் தனது பலத்தை நிலைநாட்ட அமேசான் விரும்புகிறது. ஏற்கனவே அமேசானின் கிளவுட் சேவையை (AWS) பயன்படுத்த ஓபன் ஏஐ $38 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முதலீடு அந்த உறவை மேலும் வலுப்படுத்தும். அமேசான் ஏற்கனவே ஓபன் ஏஐ-யின் போட்டியாளரான Anthropic நிறுவனத்தில் $8 பில்லியன் முதலீடு செய்துள்ளது. தற்போது ஓபன் ஏஐ-யிலும் முதலீடு செய்வதன் மூலம், ஏஐ துறையின் அனைத்து பக்கங்களிலும் தனது ஆதிக்கத்தை உறுதி செய்கிறது.