ஆப்பிள் நிறுவனத்தின் புதிய AI தலைமை பொறுப்பேற்கவிருக்கும் இந்திய வம்சாவளி அமர் சுப்ரமண்யா யார்?
செய்தி முன்னோட்டம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்முறை நிபுணரான அமர் சுப்ரமண்யா, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய AI துணைத் தலைவராக (Vice President) நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனம், அதன் செயற்கை நுண்ணறிவு பிரிவை (AI) மீண்டும் கட்டமைக்கும் (AI Reboot) முக்கியமான தருணத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிளின் அடிப்படை மாதிரிகள் மற்றும் Machine Learning ஆராய்ச்சி பிரிவுகளுக்கு இவர் தலைமை தாங்குவார். இவர் நேரடியாக மென்பொருள் பிரிவின் தலைவர் (Software Chief) கிரெய்க் ஃபெடெரிகியுடன் இணைந்து பணியாற்றுவார். புதிய தலைவர் அமர் சுப்ரமண்யாவின் நியமனம், ஆப்பிள் தனது AI முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், போட்டியாளர்களுக்கு இணையாக வலுவான தயாரிப்புகளை வழங்கவும் உள்ள அழுத்தத்தைக் காட்டுகிறது.
தொழில் பயணம்
முந்தைய முக்கியப் பணிகள்
தொழில்நுட்ப உலகில் பல தசாப்த கால அனுபவம் கொண்ட அமர் சுப்ரமண்யா, ஆப்பிளில் இணைவதற்கு முன் முக்கிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்: மைக்ரோசாஃப்ட்: இங்கு சுமார் 5 மாதங்கள் மைக்ரோசாஃப்ட்டில் AI பிரிவின் கார்ப்பரேட் துணைத் தலைவராக பொறுப்பேற்று,கோபைலட் (Copilot) போன்ற தயாரிப்புகளுக்கான அடிப்படை மாதிரிகளை உருவாக்க உதவினார். கூகிள்: அவர் கூகிளில் 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அந்நிறுவனத்தின் ஜெமினி AI (Gemini Assistant) பொறியியல் தலைவராக இருந்தார். அங்கு, பரிசோதனை மாதிரிகளை, கூகிள் தேடல், யூடியூப், மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற நுகர்வோர் தயாரிப்புகளில் செயல்படுத்தும் பணியை அவர் மேற்பார்வையிட்டார். அவரது அனுபவம் சாம்சங் மற்றும் டீப்மைண்ட் நிறுவனங்களிலும் நீள்கிறது.
கல்வி பின்னணி
இந்திய கல்வி பின்னணி
அமர் சுப்ரமண்யா இந்தியாவின் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் பிறந்தவர். அவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியலில் இளங்கலை பொறியியல் பட்டத்தை 2001ஆம் ஆண்டு பெற்றார். இந்தியாவில் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, அமெரிக்காவுக்கு சென்று சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். அவர் 2009 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வு, இயந்திர கற்றல், Large-scale சிஸ்டம்ஸ் மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (NLP) ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது.