புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனம்
மறைந்த இந்திய முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, ஆதித்யா கோஷ் மற்றும் வினய் தூபே ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய விமான சேவை நிறுவனமான ஆகாசா ஏர் நிறுவனமானது மூடப்படவிருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. தற்போது அவற்றுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, அடுத்த 75 நாட்களுக்குகள் மூன்று இலக்க எண்ணில் புதிய விமானங்களை வாங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஆகாசா ஏர் நிறுவனத்தின் துணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான வினய் தூபே. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய விமானங்களை வாங்குவதற்கான நிதியை ஆகாசா ஏர் பெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் 400 மில்லியன் டாலர்கள் நிதியைத் திரட்ட ஆகாசா ஏர் நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை செயல் அதிகாரியின் பேட்டி:
ஆகாச ஏர் நிறுவனத்தின் சிஇஓவான வினய் தூபே தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நிறுவனம் இயங்கத் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து வருவாய் ஈட்டி வருகிறது. வெளியிலிருந்து நிதி திரட்டாமலேயே கூட ஆகாசா ஏரால் புதிய விமானங்களை வாங்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஆகாசா ஏர் நிறுவனத்திலிருந்து முன்னறிவிப்பு ஏதுமின்றி 40-க்கும் மேற்பட்ட விமானிகள் தங்களது பணியிலிருந்து விலகினர். 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அதிகளவிலான விமானகள் பணியிலிருந்து விலகியதையடுத்து, ஆகாசா ஏர் விமானங்களின் பல்வேறு விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. இது குறித்து பேசும் போது, அந்த விமானிகள் மீது பல கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் வினய் தூபே.