புதிய லோகோ மற்றும் விமான அடையாளங்களை அறிமுகப்படுத்தியது ஏர் இந்தியா
தங்களது புதிய லோகோ மற்றும் புதிய விமான அடையாளங்களை வெளியிட்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம். முன்னரே நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து கைப்பற்றியது டாடா குழுமம். கடந்த நிதியாண்டில் ரூ.14,000 கோடி இழப்பைச் சந்தித்திருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்டெடுக்க புதிய திட்டங்களைத் தீட்டி வருகிறது டாடா. ஏர் இந்தியாவின் சேவைகளை மேம்படுத்தும், அதன் சேவைகளில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, புதிய விமானங்களை சேவையில் இணைப்பது எனப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது டாடா. இந்நிலையில், ஏர் இந்தியாவின் முகத்தையும் மாற்ற, அதற்கு புதிய அடையாளங்களைக் கொடுத்திருக்கிறது டாடா. அதன் பொருட்டே புதிய லோகோ மற்றும் விமான அடையாளங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
புதுப்பொழிவு பெறும் ஏர் இந்தியா:
கடந்த ஜூன் மாதம், விமான சேவை வரலாற்றிலேயே அதிகபட்சமாக 470 புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஏர் இந்தியா நிறுவனம். $70 பில்லியன் மதிப்புடைய இந்த ஒப்பந்தத்தின் கீழ், 240 ஏர்பஸ் மற்றும் 220 போயிங் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த புதிய விமானங்கள், வரும் நவம்பர் மாதம் முதல் ஏர் இந்தியாவின் சேவையில் இணையவிருக்கின்றன. புதிய சேவை, புதிய மொபைல் செயலி, விமான நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள் என ஏர் இந்தியாவையே மொத்தமாக புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது டாடா. புதிய ஏர் இந்தியாவிற்கான புதிய அடையாளமாக, 'தி விஸ்டா' லோகோ இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். வரும் டிசம்பர் முதல் இந்தப் புதிய லோகோ பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.