LOADING...
ஏர் இந்தியா விமானக் கட்டணம் அதிரடி உயர்வு! வெளிநாடு செல்வோருக்கு ரூ. 26,000 வரை கூடுதல் சுமை
ஏர் இந்தியா விமானக் கட்டணம் அதிரடி உயர்வு

ஏர் இந்தியா விமானக் கட்டணம் அதிரடி உயர்வு! வெளிநாடு செல்வோருக்கு ரூ. 26,000 வரை கூடுதல் சுமை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 07, 2026
02:37 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்களில் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை (Fuel Surcharge) அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதே வேளையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) கேம்ப்பெல் வில்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள செய்தி விமான போக்குவரத்துத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, அவ்வப்போது இந்தக் கூடுதல் கட்டணங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. கோடைக்கால விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், இந்தத் திடீர் கட்டண உயர்வு சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்.

உள்நாட்டு பயணம்

உள்நாட்டு பயணங்களுக்குத் தூரத்தின் அடிப்படையில் கட்டணம்

ஏர் இந்தியா நிறுவனம் இதுவரை பின்பற்றி வந்த நிலையான எரிபொருள் கட்டண முறையை மாற்றி, தற்போது பயணத் தூரத்தின் அடிப்படையில் புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 500 கி.மீ வரையிலான குறுகிய தூரப் பயணங்களுக்கு ரூ. 299 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். தூரம் அதிகரிக்க அதிகரிக்க இந்தக் கட்டணம் உயர்ந்து, 2,000 கி.மீ-க்கு மேலான நீண்ட தூர உள்நாட்டுப் பயணங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 899 வரை வசூலிக்கப்படும். இந்த மாற்றங்கள் ஏப்ரல் 8-ஆம் தேதி காலை 9:01 மணி முதல் அமலுக்கு வருகின்றன.

சர்வதேச வழித்தடம்

சர்வதேச வழித்தடங்களில் பல மடங்கு உயர்வு

சர்வதேச விமானப் பயணங்களுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணம் டாலர் மதிப்பில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சார்க் (SAARC) நாடுகளுக்கான பயணங்களுக்கு சுமார் ரூ. 2,232 (USD 24) கூடுதல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஐரோப்பா மற்றும் லண்டன் செல்லும் பயணிகளுக்கு சுமார் ரூ. 19,065 (USD 205) கூடுதலாக வசூலிக்கப்படும். வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நீண்ட தூர நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் ஒரு வழிப் பயணத்திற்கு மட்டும் சுமார் ரூ. 26,040 (USD 280) கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

Advertisement

பொருளாதார அழுத்தம்

எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார அழுத்தம்

பிப்ரவரி இறுதியில் ஒரு பேரல் 99.40 டாலராக இருந்த விமான எரிபொருள் விலை, மார்ச் இறுதியில் 195.19 டாலராக, அதாவது கிட்டத்தட்ட 100 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த அதீத விலை உயர்வினால் ஏற்படும் இழப்பைச் சரிசெய்யவே கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த உயர்வு ஒட்டுமொத்த செலவின அதிகரிப்பை முழுமையாக ஈடுகட்டாது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் 8 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் பல்வேறு வழித்தடங்களில் இந்த மாற்றங்கள் அமலாகும்.

Advertisement