பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள்
அதானி- ஹின்டன்பர்க் விவகாரம் தொடர்பான விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்திருப்பதையடுத்து, அதானி குழுமப் பங்குகளின் விலைகள் இன்று ஏற்றத்தைச் சந்தித்து வருகின்றன. அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு குளறுபடிகளில் ஈடுபடுவதாகக் கூறி இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹின்டன்பர்க். அந்த அறிக்கையின் அடிப்படையில் அதானி குழுமங்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஹின்டன்பர்க் அறிக்கையில் உள்ள உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ள இந்தியாவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையமான செபிக்கு உத்தவிட்டது உச்சநீதிமன்றம். செபியும் அதானி-ஹின்டன்பர்க் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்திருப்பதாகத் தெரிவித்திருப்பதோடு, கூடுதல் அவகாசம் எதுவும் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உயர்ந்த அதானி குழுமப் பங்குகளின் விலைகள்:
அதானி குழும முறைகேடு குறித்து ஹின்டன்பர்க் அறிக்கை வெளியான போது, அதானி குழுமப் பங்குகளின் விலைகள் பல வாரங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தன. தங்களது குழும நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது அதானி குழுமம். தற்போது வழக்கு விசாரணைகள் நிறைவடந்திருக்கும் நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகளின் விலை இன்று 11% வரை உயர்ந்திருக்கிறது. அதேபோல், அதானி டோட்டஸ் கேஸ் பங்கின் விலை 20%-மும், அதானி க்ரீன் எனர்ஜியின் விலை 15%-மும் அதிகரித்திருக்கிறது. பிற அதானி குழும நிறுவனங்களான NDTV, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ACC உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகளும் கணிசமான அளவில் உயர்வைச் சந்தித்திருக்கின்றன.