வாரத்தின் முதல் நாளில் அதானி நிறுவன பங்குகள் விலை உயர்வு; பின்னணி என்ன?
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகள் திங்களன்று (டிசம்பர் 2) ஆரம்ப வர்த்தகத்தில் ஒன்பது சதவீதம் உயர்ந்து, கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் பங்குகளின் சிறந்த அமர்வை பதிவு செய்தது. மும்பை பங்குச் சந்தையில் பங்கு ஒன்றுக்கு ₹ 1,445 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டில், அதானி கிரீன் எனர்ஜியின் பங்கு கிட்டத்தட்ட 27 சதவீதம் உயர்ந்தது. கடந்த வாரத்தில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. பங்கு விலையும் கடந்த வெள்ளிக்கிழமை அதன் மேல் சுற்று வரம்பான 20 சதவீதத்தை எட்டியது. அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்க நீதித்துறை சம்பந்தப்பட்ட சட்டப் பிரச்சினைக்கு பதிலளித்தார். அதானி நிறுவனம் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல என்றும் கூறியிருந்தார்.
கௌதம் அதானி பதிலின் முழு விபரம்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த 51வது ஜெம் மற்றும் ஜூவல்லரி விருது விழாவில் பேசிய கௌதம் அதானி, "இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதானி க்ரீன் எனர்ஜியின் இணக்க நடைமுறைகள் குறித்து அமெரிக்காவிடமிருந்து பல குற்றச்சாட்டுகளை உங்களில் பெரும்பாலோர் படித்திருப்பீர்கள். இதுபோன்ற சவால்களை நாங்கள் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. நான் உங்களுக்கு என்ன சொல்ல முடியும். ஒவ்வொரு தாக்குதலும் நம்மை வலிமையாக்குகிறது, மேலும் ஒவ்வொரு தடையும் மிகவும் உறுதியான அதானி குழுமத்திற்கு ஒரு படியாக மாறும்." என்று கூறினார். இதற்கிடையில், ஆரம்ப வர்த்தகத்தில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்குகள் சென்செக்ஸ் 1.7 சதவீதம் உயர்ந்து ₹ 855 ஆகவும், அதானி பவர் இரண்டு சதவீதம் உயர்ந்து ₹ 566 ஆகவும் இருந்தது.