அதானி வில்மரின் 44% பங்குகளை விற்பனை செய்கிறதா அதானி குழுமம்?
அதானி குழும வணிக நிறுவனங்களுள் ஒன்றான அதானி வில்மரின் 44% பங்குகளை சில மாதங்களுக்கு மட்டும் விற்பனை செய்யும் வாய்ப்புகளை அக்குழுமம் ஆய்வு செய்து வருவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இன்று இந்திய பங்குச்சந்தையில் அதானி வில்மரின் பங்கு விலையானது 5% வரை சரிவைச் சந்தித்தது. அதானி வில்மரின் 44% பங்குகளை விற்றுவிட்டு, குறிப்பிட்ட அளவு பங்குகளை மட்டும் தங்கள் வசம் வைத்திருக்க திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் தங்களது முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது அதானி வில்மர் நிறுவனம். அதில் அந்நிறுவனம் ரூ.79 கோடி நஷ்டத்தைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதானி வில்மர் காலாண்டு முடிவுகள்:
சமையல் எண்ணெய்யின் விலைகள் குறைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் முன்னணி சமையல் எண்ணெய் விற்பனையாளர்களுள் ஒருவரான அதானி வில்மரின் வருவாய் முதல் காலாண்டில், ரூ.12,928 கோடியாகக் குறைந்தது. சமையல் எண்ணெய்யைத் தவிர்த்து உணவு மற்றும் FMCG பொருட்களில் அந்நிறுவனத்தின் வருவாய் 28% அதிகரித்து ரூ.1,100 கோடியாக பதிவாகியிருக்கிறது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, அதன் EBITDA 71% சரிந்து ரூ.130 கோடியாகப் பதிவாகியிருக்கிறது. மேலும், கடந்த ஒரு ஆண்டில் அதானி வில்மர் பங்குகளின் விலை 43% சரிவைச் சந்தித்திருக்கிறது. இன்று 1.52 மணி நிலவரப்படி அதானி வில்மரின் பங்குகள் 3.94% சரிவைச் சந்தித்து ரூ.377.45 விலையில் வர்த்தகமாகி வருகின்றன.