இந்தியாவில் 3 லட்சம் ஸ்கூட்டர்களைத் திரும்பப் பெறுகிறது யமஹா! உங்கள் வண்டியும் இதில் இருக்கிறதா? செக் செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட தனது ஃபேசினோ மற்றும் ரேஇசட்ஆர் 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களின் முன் பக்க பிரேக் கேலிப்பரில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதால், பிரேக் பிடிக்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான மாடல்களில் உற்பத்தி காலம் மே 2, 2024 முதல் செப்டம்பர் 3, 2025 வரை தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர்கள். மொத்த எண்ணிக்கை சுமார் 3,06,635 யூனிட்கள் ஆகும். ரேசட்ஆர் 125 எஃப்ஐ ஹைப்ரிட் மற்றும் ஃபேசினோ 125 எஃப்ஐ ஹைப்ரிட் ஆகிய மாடல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வண்டி
உங்கள் வண்டியைச் சரிபார்ப்பது எப்படி?
உங்கள் ஸ்கூட்டர் இந்தத் திரும்பப் பெறும் அறிவிப்பில் (Recall) உள்ளதா என்பதை எளிய முறையில் நீங்களே ஆன்லைனில் சரிபார்க்கலாம்: யமஹா இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். அதில் Service பகுதியில் உள்ள Maintenance டேப்பை கிளிக் செய்யவும். பின்னர் Voluntary Recall Campaign என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஸ்கூட்டரின் சேஸ் நம்பரை உள்ளிடவும். ஒருவேளை உங்கள் வண்டி பாதிப்புக்குள்ளாகி இருந்தால், அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட யமஹா ஷோரூமை அணுகலாம்.
சேவை
கட்டணமில்லா சேவை
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்தக் குறைபாட்டைச் சரிசெய்யும் பணிகளை யமஹா நிறுவனம் இலவசமாகச் செய்து தருகிறது. பாதிக்கப்பட்ட பாகங்கள் எந்தவிதக் கட்டணமுமின்றி மாற்றப்படும். வாடிக்கையாளர்கள் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு நிறுவனத்தின் கட்டணமில்லா உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இந்த ஸ்கூட்டர்கள் 125 சிசி ஏர்-கூல்டு, புளூ கோர் ஹைப்ரிட் என்ஜினைக் கொண்டுள்ளன. இது 8 hp பவரையும், 10.3 Nm டார்க் திறனையும் வழங்குகிறது. தற்போது விற்பனையில் உள்ள புதிய மாடல்களில் என்ஹான்ஸ்டு பவர் அசிஸ்ட் போன்ற மேம்பட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.