
இந்தியாவில் R3 மற்றும் MT-03 பைக்குகளின் வெளியீட்டுத் தேதியை உறுதி செய்திருக்கிறது யமஹா
செய்தி முன்னோட்டம்
2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த R3 ப்ரீமியம் பைக் மாடலின் விற்பனையை நிறுத்தியது யமஹா.
அதனைத் தொடர்ந்து, இந்திய மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட இன்ஜினுடன் கூடிய புதிய R3 மாடலையும், அதே இன்ஜினைக் கொண்ட MT-03 மாடலையும் இந்தியாவில் யமஹா அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருவதாக இந்ந ஆண்டு தொடக்கத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்திய மோடோஜிபி நிகழ்வின் போது, வரும் டிசம்பரில் புதிய பைக்குகளை யமஹா வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அந்த பைக்குகளின் வெளியீட்டுத் தேதியை உறுதி செய்திருக்கிறது யமஹா.
டிசம்பர் 15ம் தேதியன்று இந்தியாவில் தங்களது R3 மற்றும் MT-03 பைக்குகளை வெளியிடவிருப்பதை உறுதி செய்திருக்கிறது யமஹா.
பைக்
யமஹாவின் R3 மற்றும் MT-03:
இந்தியாவில் யமஹாவின் R சீரிஸ் மற்றும் MT சீரிஸ் பைக்குகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ரேஸ் பைக்குகளுக்கு இணையான செயல்திறனோடு, ரோடு லீகல் பைக்குகளாக விற்பனையில் இருப்பவை அவை.
R3 பைக்கை முன்பே யமஹா விற்பனை செய்து வந்திருந்தாலும், அதன் நேக்கட் வெர்ஷனான MT-03 பைக்கை முதன் முறையாக தற்போது தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம்.
இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்கி வரும் தங்களது ப்ரீமியமான ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களின் மூலம் மட்டுமே மேற்கூறிய இரண்டு பைக்குகளையும் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது யமஹா.
டிசம்பர் 15ம் தேதி வெளியீடும், அதனைத் தொடர்ந்து டிசம்பர் இறுதியில் டெலிவரிக்களையும் துவக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
யமஹா
R3 மற்றும் MT-03: இன்ஜின் மற்றும் விலை விபரம்
யமஹாவின் இந்தப் புதிய இரண்டு பைக்குகளிலுமே 42hp பவர் மற்றும் 29.5Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 321சிசி பேரலல் ட்வின் இன்ஜினையே பயன்படுத்தியிருக்கிறது யமஹா.
இரண்டிலுமே டைமண்டு டைப் பிரேமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முன்பு விற்பனை செய்யப்பட்ட R3 மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிதாக அறிமுகமாகவிருக்கும் R3-யில் முன்பக்கம் USD ஃபோர்க்கும், பின்பக்கம் மோனேஷாக் சஸ்பென்ஷன் செட்டப்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
முதற்கட்டமாக இந்த பைக்குகளை CBU முறையிலேயே இறக்குமதி செய்சது விற்பனை செய்ய யமஹா திட்டமிட்டிருப்பதால், அதன் போட்டியாளர்களான கேடிஎம் 390 டியூக் மற்றும் RC 390 ஆகிய மாடல்களை விட கூடுதலான விலையிலேயே இந்த பைக்குகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.