உலகின் சிறந்த ஓட்டுநர்கள் தரவரிசை - ஜப்பான் முன்னிலை, பின்னுக்கு சென்ற இந்தியா!
உலகமெங்கும் உள்ள நாடுகளின் வாகனம் ஓட்டும் பழக்கத்தை பற்றி Compare the Market என்ற காப்பீட்டு நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. அதில், உலகின் சிறந்த ஓட்டுநர் நெறிமுறைகளை கடைபிடிக்கும் நாடாக ஜப்பான் உள்ளது. அங்கு அதிகமானோர் சிறந்த ஓட்டுநர்களாக உள்ளனர் என தெரிவித்துள்ளனர். அதேப்போல், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகள் தரவரிசையின் அதளபாதாளத்தில் உள்ளது. மேலும், மோசமான ஓட்டுனர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வு, 50 நாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்களைப் பகுப்பாய்வு செய்து, போக்குவரத்து விழிப்புணர்வு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் சிறந்த மற்றும் மோசமான ஓட்டுநர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, மோசமான ஓட்டுநர்களில் தாய்லாந்து முதலிடத்திலும், பெரு மற்றும் லெபனான் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
மோசமான போக்குவரத்து ஓட்டுநர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியா
சிறந்த ஓட்டுநர்களில் முதலிடம் பிடித்த ஜப்பான் 4.57 புள்ளிகளைப் பெற்ற நிலையில், இந்தியா 2.34 மதிப்பெண்களை மட்டுமே பெற்றது. அதைத்தொடர்ந்து, நெதர்லாந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து நார்வே, எஸ்டோனியா மற்றும் ஸ்வீடன் உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் சமீப வருடங்களில் சாலைப் பாதுகாப்பு குறித்த கவலைகளை ஏற்படுத்தும் வகையில், அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலையில் அதிவேகமாக ஓட்டுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடுமையான போக்குவரத்து சட்டங்களை அமல்படுத்துவது, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பால், வாகனங்களில் எண்ணிகையும் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகமாகியுள்ளன.