உலகின் 3வது பெரிய வாகன சந்தை: ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா
சமீபத்திய தொழில்துறை தரவுகளின் படி, 2022 ஆம் ஆண்டின், வாகன விற்பனையில், இந்தியா முன்னேறியுள்ளது. முதன்முறையாக ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையாக மாறியுள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை, சென்ற ஆண்டுகளில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இருப்பினும், சென்ற ஆண்டில், இந்தியாவில் கிட்டத்தட்ட 4.25 மில்லியன் யூனிட்கள் அளவுக்கு புதிய வாகனங்களின் விற்பனை ஆகியுள்ளது. இது ஜப்பானின் விற்பனையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டில், சுமார் 4.4 மில்லியன் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. ஆனால் 2019 இல், அதன் அளவு 4 மில்லியன் யூனிட்டுகளுக்குக் கீழே குறைந்தது. 2020 ஆம் ஆண்டில், அது மேலும் குறைந்து, 3 மில்லியனுக்கும் கீழே சரிந்தது.
வளரும் இந்திய வாகன சந்தை
2022 ஆம் ஆண்டில், ஆட்டோமோட்டிவ் சிப் நெருக்கடியின் தளர்வு, இந்திய வாகன சந்தை அபார வளர்ச்சி காண உதவியது. இதன் மூலம், மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் பிற இந்திய வாகன உற்பத்தியாளர்கள், கடந்த ஆண்டு விற்பனையில் வளர்ச்சி கண்டனர். 2021 ஆம் ஆண்டில் 8.5% இந்திய குடும்பங்கள் மட்டுமே பயணிகள் வாகனத்தை வைத்திருந்தனர் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் இந்திய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, இது மேலும் அதிகரிக்கும். மின்சார வாகனங்களுக்கு, அரசாங்கம் தரும் மானியங்களும், இந்த வளர்ச்சி விகித்தை மேலும் உயர்த்த கூடும்.