இந்தியாவில் கலப்பு எரிபொருளில் இயங்கும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா
செய்தி முன்னோட்டம்
கலப்பு எரிபொருளில் (Flex Fuel) இயங்கும் வகையிலான இன்ஜினைக் கொண்ட டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் கார் மாடலை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி.
பெட்ரோல் டீசலில் மட்டுமல்லாது, எத்தனாலில் இயங்கக்கூடிய வாகனங்களை கலப்பு எரிபொருள் வாகனங்கள் என அழைக்கின்றனர்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் மாடலானது, கலப்பு எரிபொருளில் மட்டுமல்லாது எலெக்ட்ரிக் வாகனமாகவும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நான்கு சிலிண்டர்கள் கொண்ட 2.0-லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும் இந்த இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் மாடலானது, E100 எனப்படும், கிட்டத்தட்ட 100 சதவிகித எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் வகையிலான இன்ஜினைக் கொண்டிருக்கிறது.
டொயோட்டா
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட்:
தற்போது கலப்பு எரிபொருளில் இயங்கக்கூடிய இந்தப் புதிய இன்னோவா ஹைகிராஸ் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த காரின் தயாரிப்பு வடிவத்தை எப்போது டொயோட்டா அறிமுகப்படுத்தும் என்பது குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.
எனினும், விரைவில் இந்தியாவில் இந்த கலப்பு எரிபொருள் வாகனத்தை அந்நிறுனம் தங்கள் லைன்அப்பில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உலகில் 100 சதவிகிதம் கலப்பு எரிபொருளில் இயங்கக்கூடிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் முதல் வாகனம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது அதிகபட்சமாக 20% வரை எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறது மத்திய அரசு. இந்திய வாகனங்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களும், அதற்கேற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட இன்ஜினை தங்கள் வாகனங்களில் வழங்கத் தொடங்கிவிட்டன.
ஆட்டோமொபைல்
கலப்பு எரிபொருள் என்றால் என்ன? அதனால் நமக்கு என்ன லாபம்?
பெட்ரோலில் குறிப்பிட்ட அளவு எத்தனால் கலந்து பயன்படுத்தப்படும் எரிபொருளே கலப்பு எரிபொருள் என அழைக்கப்படுகிறது.
தற்போது உலகிலேயே, அதிக அளவாக பிரேசிலில் தான் 48% எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவில் தற்போது தான் 20% எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டை பரவலாக்கத் திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு.
விவசாயப் பொருட்களின் மிச்சங்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலில் கலந்து பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதுடன், பெட்ரோல் இறக்குமதிக்கு ஆகும் செலவையும் கட்டுப்படுத்தி வருகிறது இந்தியா.
இந்தியாவில் 2013-14ல் 1.53% என்ற அளவிலிருந்து தற்போது 11.5% என்ற அளவிற்கு பெட்ரோலில் எத்தனால் கலப்பு உயர்ந்திருக்கிறது. இதன் மூலம், கடந்த எட்டாண்டுகளில் ரூ.41,500 கோடி வரை எரிபொருள் செலவைக் குறைத்திருக்கிறது இந்தியா.