பெட்ரோல், சிஎன்ஜிக்கு குட்-பை! இந்திய சாலைகளுக்கு எலக்ட்ரிக் கார்கள் தான் பெஸ்ட் - ஏன் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் வாகனச் சந்தையில் எலக்ட்ரிக் கார்களின் (இவி கார்கள்) தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. டாடா, மஹிந்திரா, ஹூண்டாய் மற்றும் எம்ஜி போன்ற முன்னணி நிறுவனங்கள் நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய இவி கார்களை அறிமுகம் செய்கின்றன. தற்போதைய சூழலில் இந்திய சாலைகளுக்குப் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி கார்களை விட எலக்ட்ரிக் கார்கள் தான் பொருளாதார ரீதியாகச் சிறந்த தேர்வாக விளங்குகின்றன.
எரிபொருள் சேமிப்பு
இவி கார்களின் அசாத்திய எரிபொருள் சேமிப்பு
பெட்ரோல் கார்கள் ஒரு கிலோமீட்டருக்கு 7 முதல் 10 ரூபாயும், டீசல் கார்கள் 5 முதல் 7 ரூபாயும் எரிபொருள் செலவை ஏற்படுத்துகின்றன. சிக்கனமான தேர்வாகக் கருதப்படும் சிஎன்ஜி கார்களில் கூட ஒரு கிலோமீட்டருக்குச் சராசரியாக 3 முதல் 5 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எலக்ட்ரிக் கார்களை வெறும் 1 முதல் 2 ரூபாய் கிலோமீட்டர் செலவில் மிக எளிதாக ஓட்டிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி டிராஃபிக்கில் சிக்குபவர்களுக்கும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கும் இந்த இவி கார்கள் மாபெரும் பணச் சேமிப்பைத் தருகின்றன.
குறைவான பராமரிப்பு
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் குறைவான பராமரிப்பு
எலக்ட்ரிக் கார்களில் புகைக்குழாய் இல்லாததால் அவை கார்பன் டை ஆக்சைடு போன்ற எந்தவொரு நச்சு வாயுக்களையும் வளிமண்டலத்தில் வெளியிடுவதில்லை. இவி கார்களில் என்ஜின் ஆயில், கிளட்ச், கியர்பாக்ஸ் அல்லது எக்ஸாஸ்ட் சிஸ்டம் போன்ற சிக்கலான பாகங்கள் எதுவும் கிடையாது. இதனால் வழக்கமான கார்களை விட எலக்ட்ரிக் கார்களைப் பராமரிக்கும் செலவு (Maintenance Cost) மிகக் குறைவாகவே உள்ளது. பேட்டரி மாற்றுவதற்கான செலவு மட்டுமே இதில் முதன்மையானது என்றாலும் நிறுவனங்கள் இதற்கென நீண்ட கால உத்தரவாதத்தை வழங்குகின்றன.
ஓட்டுதல் அனுபவம்
அதிநவீன வசதிகள் மற்றும் நிம்மதியான ஓட்டுதல் அனுபவம்
இவி கார்களில் என்ஜின் சத்தம் மற்றும் அதிர்வுகள் இல்லாததால் காரின் உட்பகுதி மிகவும் அமைதியாகவும் ஆடம்பரமாகவும் இருக்கும். இவை உடனடி முடுக்கம் கொண்டவை என்பதால் டிராஃபிக் நிறைந்த இந்திய சாலைகளில் கியர் மாற்றும் மன அழுத்தமின்றி ஓட்டலாம். மேலும் இவி கார்களில் பெரிய தொடுதிரைகள், ஸ்மார்ட் டிரைவிங் மோடுகள் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் போன்ற நவீன வசதிகள் நிறைந்துள்ளன. இவற்றில் ஓடிஏ அப்டேட்கள் வழங்கப்படுவதால் சர்வீஸ் சென்டர் செல்லாமலேயே காரின் மென்பொருளைப் புதிய அம்சங்களுடன் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
சார்ஜிங் வசதிகள்
அரசாங்கத்தின் அதிரடி மானியங்கள் மற்றும் சார்ஜிங் வசதிகள்
மத்திய மற்றும் மாநில அரசுகள் இவி கார்களை ஊக்குவிக்கப் பதிவு கட்டண விலக்கு மற்றும் சாலை வரி விலக்குகளை அளிக்கின்றன. மேலும், இவி கார்களுக்கான கடன் மீது வருமான வரிச் சேமிப்பு மற்றும் பல்வேறு நேரடி மானியங்களையும் அரசு வழங்கி வருகிறது. தற்போது டாடா பவர் போன்ற நிறுவனங்கள் மூலம் மால்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் நிலையங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. சிஎன்ஜி பங்குகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்த்து இவி கார்களை வீட்டிலேயே இரவு நேரத்தில் எளிதாகச் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.