எத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் கார்
G20 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கலந்து கொள்ளும் G20 மாநாடு இன்றும் நாளையும், இந்திய தலைநகரான புதுடெல்லியில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் இந்தியாவில் வருகை புரிந்திருக்கிறார்கள். G20 நாடுகளில் ஒரு அங்கமான அமெரிக்காவின் அதிபர் ஜோ பிடனும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் காராணாது இந்திய மக்களின் மற்றும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எந்த நாட்டின் பிரதமர் அல்லது அதிபர் பயணம் செய்யும் வாகனமும் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்படும். அப்படி இருக்கும் போது, உலகின் வல்லரசான அமெரிக்காவின் அதிபர் பயணம் செய்யும் வாகனம் எத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும்? பார்க்கலாம்.
ரகசிய பாதுகாப்பு வாகனம்:
அமெரிக்க அதிரபர் பயணம் செய்யும் காரை 'தி பீஸ்ட்' என அழைக்கிறார்கள். ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதில் இருந்து இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. நிலையாக இருக்கும் போது சரி, இயக்கத்தில் இருக்கும் போது சரி, தன்னைத் தாக்க வரும் பிற வாகனங்களை நோக்கி எதிர் தாக்குதல் தொடுக்கவும் தற்காத்துக் கொள்ளவும் பீஸ்டில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெரும்பாலான பாதுகாப்பு அம்சங்கள் வெளியே கசிந்து விடாதபடி பாதுகாப்பாகவே வைக்கப்பட்டிருக்கிறது. பீஸ்டின் பாதுகாப்பு அம்சங்களின் மிகவும் சில அம்சங்கள் மட்டுமே வெளியே தெரிந்திருக்கிறது. என்னென்ன பாதுகாப்பு வசதிகள் பீஸ்டில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பீஸ்டின் பாதுகாப்பு அம்சங்கள்:
கேடிலாக் லிமௌஸின் காரையே தற்போது அமெரிக்க அதிபர் பயன்படுத்தி வருகிறார். எந்த நாட்டிற்குச் சென்றாலும், இந்தக் காரில் தான் அவர் பயணம் செய்வாராம். இந்த பீஸ்டானது எட்டு முதல் பத்து டன் எடையைக் கொண்டிருக்குமாம். எட்டு இன்ச் தடிமனான ஆர்மர் பிளேட் மற்றும் ஆர்மர் புளோரிங் கொண்டு பீஸ்ட் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, பீஸ்ட் காரின் அடியிலேயே கூட குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும், உள்ளே இருப்பவர்களுக்கு பெரிய ஆபத்து இருக்காது. துப்பாக்கி குண்டு துளைக்காத கண்ணாடிகள் பீஸ்ட் கொண்டிருக்கிறது என்பதை நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. 120V வரை எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கக்கடிய டோர் ஹேண்டில்கள் மற்றும் ஸ்மோக் ஸ்கிரீன் ஆகிய வசதிகளும் பீஸ்டில் உண்டாம்.
இரண்டு பீஸ்ட் கார்கள்:
மேலும், இரசாயனத் தாக்குதல் நிகழ்த்தினாலும், காரின் உள்ளே புகாதபடி பீஸ்டை சீல் செய்து கொள்ள முடியும். பிரதமரின் அணிவகுப்பில் ஒரே மாதிரியான, ஒரே எண்களைக் கொண்ட இரண்டு பீஸ்ட் கார்கள் பயணம் செய்யும். எந்தக் காரில் பிரதமர் இருக்கிறார் எனத் தெரியக் கூடாது என்பதற்காக இந்த செட்டப். இந்த பீஸ்ட் காரை சில வருடங்களுக்கு ஒரு முறை புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு பீஸ்டின் விலை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் 12.5 கோடி ரூபாய்) மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைத் தவிர இதன் மேம்பாடுகளுக்கான ஆராய்ச்சிக்கா 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 125 கோடி ரூபாய்) செலவு தனி.
மருத்துவ உபகரணங்கள்:
அவசரகால பயன்பாட்டிற்காக அதிபரின் இரத்த வகையைச் சேர்ந்த இரத்தப் பைகள் எப்போதும் பீஸ்டில் இருக்குமாம். இதுதவிர அவசர கால பயன்பாட்டிற்காக ஆக்ஸிஜனும் எப்போதும் பீஸ்டில் இருக்குமாம். ஏழு பேர் வரை அமரும் வகையிலான வசதியுடனேயே பீஸ்ட் வடிவமைக்கப்படுகிறது. எனவே, அவசரகாலத்தில் ஏழு பேர் வரை அதிபருக்கு பாதுகாப்பாக காரினுள் பயணம் செய்யும் முடியும். இவை தவிர, பல்வேறு மேம்படுத்தப்பட்ட தொலைத் தொடர்பு உபகரணங்களையும் கொண்டிருக்கிறது பீஸ்ட். இன்னும் சொல்லப் போனால், ஒரு அணு ஆயுதத்தையே அமெரிக்க அதிபரால் பீஸ்டினுள் இருந்தபடியே ஏவ முடியும். இவ்வளவு பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், அதிகபட்சம் 30 நிமிடம் வரையிலான பயணத்திற்கு மட்டுமே இந்த பீஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. 30 நிமிடத்திற்கு மேல் என்றால் ராணுவ விமானம் தானாம்.