செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தவிருக்கும் கியா.. என்னென்ன மாற்றங்கள்?
செல்டோஸ் மாடல் எஸ்யூவியை கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கியா. அதனைத் தொடர்ந்து அதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். அந்த செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வரும் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது கியா. செல்டோஸை சன்ஃரூப் வசதியுடன் மட்டுமே வெளியிட்டது கியா. ஆனால், தற்போது பனோரமிக் சன்ஃரூப் வசதியை செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டில் அளிக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பனோரமிக் சன்ஃரூப் வசதியைப் பெறும் 5-வது மிட்சைஸ் எஸ்யூவியாக செல்டோஸ் இருக்கும். மறுவடிவம் செய்யப்பட்ட கிரில், புதிய முகப்பு விளக்குகள் மற்றும் புதிய டிசனுடன் கூடிய அலாய் வீல்கள் ஆகிய மாற்றங்களை மட்டுமே டிசைனில் கிய செய்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
இன்ஜின் மற்றும் புதிய வசதிகள்:
தற்போது இருக்கும் அதே இன்ஜினே புதிய செல்டோஸிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கூடுதலாக 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியன்டை கியா மறுஅறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக புதிய செல்டோஸில் ADAS வசதியை கியா கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் இந்த அம்சத்தைப் பெறும் முதல் காராக கியா இருக்கும். ஆறு ஏர்பேக்குகள், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், வெகிக்கிள் ஸ்டெபிலிட்டி மேனேட்மென்ட், பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்படலாம். க்ரெட்டா, கிராண்டு விட்டாரா, ஹைரைடர், டைகூன், குஷாக் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனையாகி வருகிறது செல்டோஸ்.