புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்.. இந்தியாவிலும் வெளியாகுமா?
மூன்று புதிய எலக்ட்ரிக் எஸ்யூவிக்களை சர்வதேச சந்தையில் வெளியிடுவதற்காக ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தொடக்க நிலை சிறிய சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, ட்ரினிடி எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் தற்போது விற்பனையில் இருக்கும் டிகுவானை அடிப்படையாகக் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி என மூன்று எஸ்யூவி மாடல்களை உருவாக்கி வருகிறது ஃபோக்ஸ்வாகன். மேற்கூறிய மூன்று மாடல்களில் முதலில் அந்நிறுவனம் வெளியிடவிருப்பது டிகுவான் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி தானாம். 2025-ல் இந்த டிகுவான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். இதனை அந்நிறுவனத்தின் தற்போதையே MEB பிளாட்ஃபார்மில் இருந்து மேம்படுத்தப்பட்ட MEB+ பிளாட்ஃபார்மில் அந்நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஃபோக்ஸ்வாகனின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கள்:
டிகுவான் எஸ்யூவியைத் தொடர்ந்து 2026-ல், தற்போது விற்பனையில் இருக்கும் டி-கிராஸூக்கு மாற்றான எலெக்ட்ரிக் மாடலாக சிறியி எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்றை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஃபோக்ஸ்வாகன். இது தான் ஃபோக்ஸ்வாகனின் மிகவும் விலை குறைந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ID 2X என்ற பெயரில் இந்த எஸ்யூவி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 2028-ல் விலையுயர்ந்த ட்ரினிடி எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இந்தியாவில் இன்னும் எலக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. ID4 GTX மாடலை இந்தியாவில் தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் காராக வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஃபோக்ஸ்வாகன். அதோடு டிகுவான் எலெக்ட்ரிக் எஸ்யூவியையும், ID2 ஆல் ஹேட்ச்பேக் மாடலையும் இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.