காரின் கண்கள் vs காரின் குரல்! V2V மற்றும் ADAS தொழில்நுட்பங்களின் வித்தியாசம் என்ன? 2028 மத்திய அரசின் அதிரடி திட்டம்
செய்தி முன்னோட்டம்
சாலையில் வாகன விபத்துகளைத் தடுத்து பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் வாகனங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் 'வி2வி' (V2V - Vehicle to Vehicle) தொழில்நுட்பத்தை 2028 அக்டோபர் 1 முதல் உற்பத்தியாகும் அனைத்து புதிய வாகனங்களிலும் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, V2V என்பதும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஏடாஸ் (ADAS) என்பதும் ஒன்றுதானா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. எளிமையாகச் சொன்னால், ADAS என்பது ஒரு காரின் கண்கள் போன்றது. V2V என்பது காரின் குரல் போன்றது. இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்ட தொழில்நுட்பங்கள் ஆகும்.
ஏடாஸ் அமைப்பு
ஏடாஸ் (ADAS) அமைப்பின் செயல்பாடு மற்றும் அதன் எல்லைகள்
ஏடாஸ் (ADAS) தொழில்நுட்பமானது கேமரா, ரேடார், அல்ட்ராசோனிக் சென்சார்கள் மற்றும் லிடார் (LiDAR) போன்ற வன்பொருள்களை மட்டுமே முழுமையாக நம்பி இயங்குகிறது.
இது காரை சுற்றியுள்ள சூழலை நேரடியாகப் பார்த்து, முன்னால் செல்லும் வாகனம் திடீரென நின்றாலோ அல்லது பாதையில் தடைகள் இருந்தாலோ தானியங்கி அவசரகால பிரேக்கிங் மூலம் காரை நிறுத்துகிறது.
ஆனால், கேமரா அல்லது ரேடார் பார்வையில் நேரடியாகப் புலப்படும் தடைகளை மட்டுமே ஏடாஸ் அமைப்பால் கண்டறிய முடியும் என்பது இதன் மிகப்பெரிய வரம்பாகக் கருதப்படுகிறது.
வி2வி அமைப்பு
வி2வி (V2V) தொழில்நுட்பம் எவ்வாறு புரட்சி செய்கிறது?
V2V தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட வாகனம், தன் அருகில் செல்லும் பிற வாகனங்களுடன் வயர்லெஸ் முறையில் வேகம், இருப்பிடம், திசை மற்றும் பிரேக்கிங் தரவுகளை நேரடியாகப் பரிமாறிக்கொள்கிறது.
ஒரு பெரிய லாரிக்கு முன்னால் இருக்கும் வாகனம் பிரேக் பிடித்தால், பின்னால் வரும் காருக்கு கேமரா பார்வை இல்லாவிட்டாலும் V2V எச்சரிக்கை சமிக்ஞையை உடனடியாக அனுப்பி விடும்.
சுருக்கமாக சொன்னால், ஏடாஸ் தன் கண்ணால் பார்ப்பதை வைத்து முடிவெடுக்கிறது. V2V பிற வாகனங்கள் சொல்லும் தகவலை வைத்து முன்கூட்டியே எச்சரிக்கிறது.
மத்திய அரசின் திட்டம்
இருசக்கர வாகனங்கள் மற்றும் 2028 மத்திய அரசின் கட்டாய திட்டம்
V2V தொழில்நுட்பம் முழு பலன் அளிக்க சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்களில் இக்கருவி இருக்க வேண்டும்.
இதனால் தான் மத்திய அரசு கார்கள் (M பிரிவு), லாரிகள் (N பிரிவு) மட்டுமின்றி இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்களுக்கும் (L பிரிவு) V2V-ஐக் கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளது.
AIS-230 தரநிலையின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, லாரிகளின் பிளைண்ட் ஸ்பாட்டில் நுழையும் பைக்குகளை முன்கூட்டியே எச்சரித்து இந்தியாவில் நடக்கும் பல கொடூர சாலை விபத்துகளைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.