இந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் கார்கள்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மூன்று கார் தயாரிப்பு நிறுவங்கள் தங்களுடைய புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் தங்களுடைய சோனெட் மாடலுடன் கியாவும், புதிய அர்பன் க்ரூஸர் டெய்ஸர் மாடலுடன் டொடோட்டாவும் மற்றும் மேம்படுத்தப்பட்ட மேக்னைட் ஃபேஸ்லிப்ட் மாடலுடன் நிஸானும் தங்களது புதிய கார்களை களமிறக்கத் தயாராகி வருகின்றன. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சோனெட் மாடலின் புக்கிங்குகள் இந்த டிசம்பர் மாதமே துவங்கவிருக்கும் நிலையில், இதன் வெளியீடு 2024 ஜனவரியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு புதிய வசதிகள் மற்றும் டிசைன் மாற்றங்களுடன் முதல் நிலை ADAS பாதுகாப்பு வசதிகளும் புதிய சோனெட்டில் அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவிக்கள்:
மாருதி சுஸூகி பிரான்க்ஸ் எஸ்யூவி மாடலின் ரீபேட்ஜூடு வெர்ஷனாக புதிய அர்பன் க்ரூஸர் டெய்ஸர் மாடலை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது டொயோட்டா. இன்ஜின் முதல் வசதிகள் வரை பிரான்க்ஸின் அதே அம்சங்களை புதிய டெய்ஸரிலும் நாம் எதிர்பார்க்கலாம். மேலும், டிசைனில் மட்டும் சின்னச் சின்ன மாற்றங்களை நாம் எதிர்பார்க்க முடியும். 2024ன் இடைப்பகுதியில் புதிய மேம்படுத்தப்பட்ட மேக்னைட் ஃபேஸ்லிப்ட் மாடலை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது நிஸான். இந்தியாவில் தற்போது அந்த ஒரு மாடலை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. வெளிப்பக்க மற்றும் உட்பக்க டிசைன் மாற்றங்களுடன், சில புதிய வசதிகளையும் புதிய அப்டேட்டின் மூலம் மேக்னைட்டில் நிஸான் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.