செப்டம்பர் 2026ல் சந்தைக்கு வரும் புதிய கார்கள்: கியா சோரென்டோ முதல் பொர்ஷே வரை; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
வரும் செப்டம்பர் 2026 மாதம் இந்திய வாகன சந்தைக்கு புதிய புத்துணர்வை அளிக்கவுள்ளது. பண்டிகைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், எளிய பட்ஜெட் ஹேட்ச்பேக் மாடல்கள் முதல் சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவிகள் வரை பல்வேறு பிரிவுகளில் புதிய கார்கள் வரிசையாக அறிமுகமாகவுள்ளன. கியா, மாருதி சுசுகி, பிஎம்டபிள்யூ, ஸ்கோடா மற்றும் பொர்ஷே போன்ற முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்களை இந்த மாதத்தில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வருகின்றன. புதிய கார் வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதம் மிகப்பெரிய தேர்வுகளை வழங்கவுள்ளது.
செப்டம்பர் 4
கியா சோரென்டோ
கியா நிறுவனம் தனது பிரம்மாண்டமான சோரென்டோ' 3 வரிசை இருக்கைகள் கொண்ட பிரீமியம் எஸ்யூவியை செப்டம்பர் 4 அன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறது.
கியா பிராண்டின் பிரபல எம்பிவியான கார்னிவல் மாடலுக்கு மேலே இது நிலைநிறுத்தப்படும்.
இந்திய சந்தைக்கான மாடலில் டீசல் மற்றும் சக்திவாய்ந்த ஸ்ட்ராங்-ஹைபிரிட் என இருவிதமான எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது சந்தையில் ஏற்கனவே வெற்றிகரமாக உலா வரும் ஸ்கோடா கோடியாக், போக்ஸ்வேகன் டேரன் மற்றும் ஜீப் மெரிடியன் ஆகிய கார்களுக்குக் கடுமையான போட்டியாக அமையும்.
செப்டம்பர் 5
மாருதி சுசுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட்
இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தனது மிகவும் பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோவின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை செப்டம்பர் 5 அன்று களம் இறக்குகிறது.
காரின் வெளிப்புற வடிவமைப்பு மற்றும் உட்புற தொழில் நுட்ப வசதிகளில் பல்வேறு மாற்றங்களுடன் இது வரவுள்ளது.
இதில் வழக்கமான பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எஞ்சின் தேர்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரின் முன் பக்க முகப்பு, கிரில் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை இதில் முக்கிய மாற்றங்களாக இருக்கும்.
செப்டம்பர் 11
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் i7 ஃபேஸ்லிஃப்ட்
ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, தனது முதன்மை செடான் மாடல்களான 7 சீரிஸ் மற்றும் அதன் எலக்ட்ரிக் பதிப்பான i7 ஆகியவற்றின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்புகளைச் செப்டம்பர் 11 அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.
இந்த புதிய பதிப்பில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிநவீன Panoramic iDrive இன்போடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளதே இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.
குறிப்பாக i7 எலக்ட்ரிக் காரின் பேட்டரி திறன், மைலேஜ் ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் வேகம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொர்ஷே
பொர்ஷே கயென் எலக்ட்ரிக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்
உலகப் புகழ்பெற்ற விளையாட்டுக் கார் தயாரிப்பான பொர்ஷே, தனது பிரசித்தி பெற்ற கயென் எஸ்யூவியின் எலக்ட்ரிக் பதிப்பான கயென் எலக்ட்ரிக் மாடலை செப்டம்பர் 30 அன்று உலகளவில் அறிமுகப்படுத்துகிறது.
இதனுடன் இந்திய சந்தைக்கான வெளியீட்டுத் தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், ஸ்கோடா நிறுவனத்தின் நடுவிலை செடான் காரான ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வேரியண்ட் வாரியான அதிகாரப்பூர்வ விலை விவரங்களும் இந்த செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படவுள்ளன.