100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத்
இந்தியாவில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரிக்கும் நிலையில் அரசும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கிறது. 2022-23 ஆண்டில் மட்டுமே இந்தியாவில் 7 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, மின்சார வாகனத்தின் பயன்பாட்டை மேம்படுத்த உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கையில், 2030-ஆண்டிற்குள் அனைத்து அரசு துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக அனைத்து அரசு துறைகளும் டெண்டர் இல்லாமல், நியமனத்தின் அடிப்படையில் மின் வாகனங்களை வாங்கலாம் என்றும், மின் வாகனத்தை வாங்க அதிகபட்ச வரம்பை விட தேவைக்கு ஏற்பட செலவு செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
2030க்குள் 100% மின்சார வாகன மாநிலமாக உபி மாறும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்
இதன் மூலம் 2030 ஆண்டிற்குள் அரசு துறைகளில் 100 சதவீதம் மின்சார வாகனம் வைத்திருக்கும் முதல் மாநிலமாக உத்திரப்பிரதேச மாநிலம் உருவாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே உபி அரசு வெளியிட்ட அறிவிப்பில் மின்சார வாகன இயக்கக் கொள்கையின் படி அக்டோபர் 14 2022, முதல் அக்டோபர் 13, 2025 வரை விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என கூறியிருந்தது. தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்கள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்து இருந்தது. எனவே உத்திரப்பிரதேச மாநிலத்தின் மின்சார வாகன ஊக்குவிப்பால் எலக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரிக்கும் எனக்கூறப்படுகிறது.