ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஐரோப்பாவில் கால் பதிக்கும் டிவிஎஸ்
ஐரோப்பிய நாடுகளிலும் தங்களது ஆட்டோமொபைல் வணிகத்தை விஸ்தரிக்கும் பொருட்டு, இந்தியாவைச் சேர்ந்த டிவிஎஸ் பைக் தயாரிப்பு நிறுவனமானது, ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த எமில் ஃபிரே (Emil Frey) நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது. இந்த எமில் ஃபிரே நிறுவனமானது ஏற்கனவே பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வாகனங்களை இறக்குமதி செய்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. தற்போது டிவிஎஸ் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களையும், இறக்குமதி செய்து குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளின் விநியோகத்தை மேற்கொள்ளவிருக்கிறது எமில் ஃபிரே. இந்த புதிய திட்டம் குறித்த தகவலை பங்குச்சந்தை தாக்கலின் போது குறிப்பிட்டிருக்கிறது டிவிஎஸ் நிறுவனம்.
ஐரோப்பாவில் கால் பதிக்கும் டிவிஎஸ்:
தற்போது, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். தற்போது இந்த எமில் ஃபிரே நிறுவனனத்துடனான கூட்டணியினைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ஜனவரி 2024 முதல் பிரான்ஸ் நாட்டில் தங்களது இரு சக்கர வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யவிருக்கிறது. ஜூப்பிடர் 125, என்டார்க், ரெய்டர் 125, ஐக்யூப் S, ரோனின், அப்பாச்சி RR 310 மற்றும் அப்பாச்சி RTR 310 உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யத் டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.