ஸ்பீடு 400 பைக்கின் ஆன்-ரோடு விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது ட்ரையம்ப்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் தங்களுடைய புதிய என்ட்ரி-லெவல் ப்ரீமியம் பைக்கான ஸ்பீடு 400 பைக்கை வெளியிட்டது ட்ரையம்ப் நிறுவனம். இந்த பைக்கை இந்தியாவில் ரூ.2.33 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டது ட்ரையம்ப். மேலும், அறிமுக சலுகையாக முதலில் பதிவு செய்யும் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.2.23 அறிமுக விலையில் வழங்கவிருப்பதாகவும் அறிவித்திருந்தது அந்நிறுவனம். மேலும், அறிமுகப்படுத்தி மூன்று நாட்களிலேயே 10,000 முன்பதிவையும் பெற்றது ட்ரையம்ப் ஸ்பீடு 400. தற்போது அந்த பைக்கின் ஆன்-ரோடு விலை விபரத்தினை வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப். டெல்லி, கோவா, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கான ஆன்-ரோடு விலை மட்டும் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
சர்ச்சையான ஆன்-ரோடு விலை:
ஸ்பீடு 400 பைக்கின் வெளியீட்டிற்குப் பின்பு பெங்களூருவில் உள்ள டீலர்ஷிப் ஒன்றில், பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.3 லட்சத்தைக் கடந்து மிக அதிகமாக குறிப்பிடப்பட்டிருந்ததையடுத்து, அது குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்தே, ஸ்பீடு 400 பைக்கின் ஆன்-ரோடு விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருப்பதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தது ட்ரையம்ப். அதன் பொருட்டே தற்போது ஸ்பீடு 400 பைக்கின் ஆன்-ரோடு விலை வெளியிடப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சமாக டெல்லியில் ரூ.2.68 லட்சம் ஆன்-ரோடு விலையாகவும், அதிகபட்சமாக ஹைதராபாத் மற்றும் மும்பையில் ரூ.2.87 லட்சம் ஆன்-ரோடு விலையாகவும் அறிவித்திருக்கிறது ட்ரையம்ப். கோவாவில் ரூ.2.86 லட்சம் ஆன்-ரோடு விலையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.