இந்தியாவில் டொயோட்டா அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய கார் மாடல்கள் என்னென்ன?
டொயோட்டா நிறுவனத்திடமிருந்து இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலை ரீபேட்ஜ் செய்து இன்விக்டோவாக இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது மாருதி சுஸூகி. தற்போது மாருதியின் மேலும் இரண்டு மாடல்களை ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் வெளியிவிருக்கிறது டொயோட்டா. அது மட்டும் இல்லாமல், ஏற்கனவே விற்பனை செய்து தங்களுடைய கார் ஒன்றின் அப்டேட் செய்யப்பட்ட மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது டொயோட்டா. மாருதி சுஸூகியின் எர்டிகா மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகிய மாடல்களையே தற்போது ரீபேட்ஜ் செய்யத் திட்டமிட்டிருக்கிறது டொயோட்டா. ஏற்கனவே எர்டிகா மாடலை ரூமியான் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து தென்னாப்பிரிக்காவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது அதனை இந்தியாவிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டொயோட்டா.
டொயோட்டா அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய கார்கள்:
இந்த ரூமியான் மாடலை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தியாவிலும் அதன் பெயரை ட்ரேட் மார்க்கிற்கு பதிவு செய்திருக்கிறது டொயோட்டா. இந்தியாவில் விற்பனையை நிறுத்திய அர்பன் க்ரூஸரின் இடத்தை நிரப்பு ஃப்ரான்க்ஸ் மாடலை ரீபேட்ஜ் செய்து வெளியிடவிருக்கிறது டொயோட்டா. மிகச் சிறிய அளவில் மட்டுமே டிசைன் மாற்றங்களை மேற்கொண்டு இந்த ரீபேட்ஜ் வெர்ஷனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. என்ன பெயரில் இந்த புதிய ரீபேட்ஜ்டு மாடலை டொயோட்டா வெளியிடவிருக்கிறது என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. சர்வேதச சந்தையில் சமீபத்தில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய மூன்றாம் தலைமுறை வெல்ஃபயரை இந்தியாவிலும் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது டொயோட்டா.