மாருதி பிரான்க்ஸை அடிப்படையாகக் கொண்ட புதிய கார் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் டொயோட்டா
இந்தியாவின் மாருதி சுஸூகி பிரெஸ்ஸாவின் ரீபேட்ச் மாடலான தங்களுடைய அர்பன் க்ரூஸர் மாடலின் விற்பனையை நிறுத்திய பிறகு, 4மீ உட்பட்ட கார் பிரிவில் மாருதியின் பிரான்க்ஸ் மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய மாடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது டொயோட்டா. இந்த பிரான்க்ஸை அடிப்படையாகக் கொண்ட மாடலை டெய்சர் (Taisor) என்ற பெயரில் இந்தியாவில் டொயோட்டா அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரான்க்ஸில் இருந்து டெய்சரை வேறுபடுத்திக் காட்ட கிரில், பம்பர்கள் மற்றும் விளக்குகள் மற்றும் வீல்களின் டிசைன்களில் மாற்றம் செய்து அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது டொயோட்டா. இதனைத் தவிர உட்பக்கம் வசதிகள் மற்றும் இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.
டொயோட்டா டெய்சர்: இன்ஜின் மற்றும் வசதிகள்
பிரான்க்ஸில் பயன்படுத்தப்பட்ட, 89hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 100hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளே புதிய டெய்சரிலும் கொடுக்கப்படவிருக்கின்றன. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் தேர்வு ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்படவிருக்கும் நிலையில், டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 6-ஸ்பீடு டார்க் கண்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு ஒன்றும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜினைத் தவிர்த்து, 1.2 லிட்டர் CNG வேரியன்ட் கொண்ட செய்சர் வேரியன்ட் ஒன்றையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறதாம் டொயோட்டா. புதிய டொயோட்டா டெய்சரின் விலையும், மாருதி பிரான்க்ஸின் ரூ.7.47 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையை ஒட்டியே இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் புதிய மாடலை 2024ன் முதல் காலாண்டில் டொயோட்டா அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.