தமிழகத்தில் உயர்த்தப்பட்டது மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரி.. உயர்கின்றன வாகன விலைகள்!
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு. முன்னதாக இருசக்கர வாகனங்களுக்கான சாலை வரியானது 2008ம் ஆண்டும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 2010ம் ஆண்டும், வணிகப் பயன்பாடுகளுக்கான வாகனங்களுக்கு 2012ம் ஆண்டும் சாலை வரியை உயர்த்தியது தமிழக அரசு. மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை உயர்த்துவது தொடர்பான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர். புதிய மசோதாவிற்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்த பின்பு, இந்த மசோதாவானது அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சாலை வரி உயர்வு அமலுக்கு வந்த பின், தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்களின் விலையும் 5% வரை உயர வாய்ப்பிருக்கிறது.
சாலை வரி எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?
முன்னதாக அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் 15 ஆண்டு காலத்திற்கு மொத்தமாக 8% சாலை வரியாக விதிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய விதியின்படி ரூ.1 லட்சத்திற்குள்ளான விலையில் விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு சாலை வரி 10% ஆகவும், ரூ.1 லட்சத்திற்கும் மேலான விலையில் விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு சாலை வரி 12% ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த சாலை வரி உயர்வினால் தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் விலைகளானது ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை உயரவிருக்கிறது. இரு சக்கர வாகனங்களைப் போலவே நான்கு சக்கர வாகனங்களுக்கு விலைக்கு ஏற்ப சாலை வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.
நான்கு சக்கர வாகனங்களுக்கான சாலை வரி:
ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இதுவரை 15% சாலை வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இந்த விலை வரம்பில் விற்பனை செய்யப்படும் நான்கு சக்கர வாகனங்களின் விலைகளானது ரூ.1.2 லட்சம் முதல் ரூ.2.4 லட்சம் வரை உயர வாய்ப்பிருக்கிறது. அதே போல், ரூ.10 லட்சத்திற்குள்ளான விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு இது வரை 10% சாலை வரியாக விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 13% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரூ.10 லட்சத்திற்குள்ளான கார்களின் விலைகளானது ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை உயரவிருக்கிறது.
சுற்றுலா வாகனங்களுக்கான சாலை வரி:
ரூ.10 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும், 7 சீட்கள் வரை கொண்ட சுற்றுலா கார்கள் மற்றும் 13 சீட்கள் வரை கொண்ட சுற்றுலா மேக்ஸி கேப்களுக்கு இதுவரை 10% சாலை வரி விதிக்கப்பட்டு வந்தது. புதிய வரி விதிப்பு மசோதாவில் இந்த வரிகளும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதன்படி, ரூ.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும் சுற்றுலா வாகனங்களுக்கு 12% சாலை வரியும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான விலை கொண்ட சுற்றுலா வாகனங்களுக்கு 13% சாலை வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான சுற்றுலா வாகனங்களுக்கு 18%-மும், ரூ.20 லட்சத்திற்கும் மேல் விலை கொண்ட சுற்றுலா வாகனங்களுக்கு 20%-மும் சாலை வரி விதிக்கப்பட்டுள்ளது.