கதவு ஹேண்டில் செயலிழப்பு; காரில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து! சீனாவில் 30 லட்சம் கார்களைத் திரும்பப் பெறுகிறது டெஸ்லா
செய்தி முன்னோட்டம்
மின்சார வாகன உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 29.8 லட்சம் மின்சார வாகனங்களை அதிரடியாகத் திரும்பப் பெறுகிறது. கார்களின் கதவு கைப்பிடி மற்றும் அவசரகால இயந்திரத் திறப்பு அமைப்பில் நிலவும் தீவிரப் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன சந்தை ஒழுங்குமுறைக்கான நிர்வாக அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆபத்து
எமர்ஜென்சி லாக் திறப்பதில் உள்ள சிக்கலும் விபத்து ஆபத்துகளும்
டெஸ்லா கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகள் மற்றும் உட்புற இயந்திரத் திறப்பு பொத்தான்கள், காரின் உட்புற நிறத்தை ஒத்தே அமைந்துள்ளன.
இதனால் தீவிர விபத்து அல்லது மின்தடை ஏற்படும் போது, காரின் உள்ளே இருக்கும் பயணிகள் எமர்ஜென்சி லாக் பொத்தானைக் கண்டறிந்து கதவைத் திறந்து வெளியேறுவது அல்லது வெளிப்புற மீட்புக் குழுவினர் கதவைத் திறந்து உள்ளே நுழைவது மிகவும் கடினமாக அமைகிறது.
இது பயணிகளின் உயிருக்கே ஆபத்தாக முடிவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2027 முதல் தடை
2027 முதல் மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளுக்கு சீனா தடை
சமீபகாலமாக மின்சார வாகன விபத்துகளின் போது எலெக்ட்ரானிக் கதவுகள் செயல்படாமல் பயணிகள் உள்ளேயே சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.
இதன் காரணமாக 2027 ஜனவரி 1 முதல் கார்களில் முழுமையாக மறைக்கப்பட்ட எலெக்ட்ரானிக் கதவு கைப்பிடிகளை பயன்படுத்த சீன அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது.
இந்தத் தடைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக, சந்தையில் உள்ள கார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த மிகப்பெரிய ரீகால் நடவடிக்கை ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
தீர்வு
சாப்ட்வேர் அப்டேட் மற்றும் எச்சரிக்கை லேபிள்கள் மூலம் தீர்வு
பாதிக்கப்பட்ட மாடல் 3, மாடல் Y, மாடல் X மற்றும் மாடல் S கார்களுக்கு டெஸ்லா நிறுவனம் இலவசமாக எச்சரிக்கை லேபிள்களை ஒட்டவுள்ளது.
மேலும் விபத்து நிகழும் போது காரின் ஜன்னல் கண்ணாடிகள் தானாகவே சற்று கீழே இறங்கி, பயணிகள் எளிதாகத் தப்பவும் மீட்புக் குழுவினர் உதவவும் வழிவகை செய்யும் வகையில் புதிய மென்பொருள் புதுப்பிப்புகளையும் டெஸ்லா நிறுவனம் வழங்கவுள்ளது.
ரீகால் நடவடிக்கை
சீனாவில் பிற முன்னணி நிறுவனங்களும் ரீகால் நடவடிக்கை
டெஸ்லா மட்டுமின்றிச் சீனாவை சேர்ந்த ஷியோமி, லீப்மோட்டார், கீலி, எக்ஸ்பெங் உள்ளிட்ட 8 முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களும் இதே கதவு கைப்பிடி பிரச்சினைக்காகத் தங்களின் லட்சக்கணக்கான கார்களைத் திரும்பப் பெற்று வருகின்றன.
ஒட்டுமொத்தமாக சீனாவில் 40 லட்சத்திற்கும் அதிகமான மின்சார வாகனங்கள் ஒரே நேரத்தில் திரும்பப் பெறப்படுவது, சர்வதேச வாகன உற்பத்தி வரலாற்றில் மிக முக்கியமான பாதுகாப்பு மாற்றமாகக் கருதப்படுகிறது.