இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கும் டெஸ்லா?
டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த குழு ஒன்று இந்தியாவில் கார்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காகவும், பேச்சுவார்த்தைக்காகவும் சில நாட்களுக்கு முன் இந்தியா வந்திருந்தது. எலெக்ட்ரிக் கார்களுக்கான சலுகைகள் குறித்து இந்தியாவில் பேட்டரிக்களை தயாரிப்பது குறித்து இந்திய வந்த டெஸ்லா குழு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தங்கள் கார்களை தயாரிப்பது குறித்தும் தொழிற்சாலை அமைப்பது குறித்தும் தீவிரமாக இருப்பதாக பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். இந்தியாவில் முதலீடு செய்ய டெஸ்லா நிறுவனம் முடிவெடுக்கும் பட்சத்தில், அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் எனத் தாங்கள் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் அவர்.
இந்தியாவில் டெஸ்லா?
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மற்றும் பேட்டரிக்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைக்க முன்மொழிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டிலிருந்த நிலைப்பாட்டில் இருந்து டெஸ்லா மாறியிருப்பதையே காட்டுகிறது. கடந்த ஆண்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்வதற்கே விருப்பம் காட்டியிருந்தது டெஸ்லா. மேலும், அதற்காக இறக்குமதி வரிகளைக் குறைக்கவும் இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தற்போது இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அமெரிக்காவைக் கடந்து சீனாவின் ஷாங்காய் மற்றும் அமெரிக்காவின் பிராண்டன்பர்க் ஆகிய இடங்களில் தங்களது கார் தயாரிப்பு தொழிற்சாலைகளை டெஸ்லா நிறுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.