சீனாவில் முழு செல்ஃப் -டிரைவிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது டெஸ்லா
மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா, தனது முழு செல்ஃப் -டிரைவிங்(FSD) தொழில்நுட்பத்தை சீனாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. வாகனத் துறை வல்லுனர்களின் சந்தேகங்கள் இருந்தபோதிலும், டெஸ்லா அதன் FSD தொழில்நுட்பத்தில் நம்பிக்கையுடன் உள்ளது. இந்த முழு செல்ஃப் -டிரைவிங் அமைப்பு ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகமாகி, உலகளவில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், ஒரு சமூக ஊடக உரையாடலின் போது சீனாவில் FSD இன் உடனடி அறிமுகம் குறித்து பேசினார். ஆனால் அப்போது அவர் அது அறிமுகமாகும் தேதியைக் குறிப்பிடவில்லை.
FSD தொழில்நுட்பம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது
டெஸ்லா தனது FSD தொழில்நுட்பத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது. ஆனால் அது இன்னும் சீனாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. வாடிக்கையாளரின் ஆர்வம் வளர்ந்து வரும் நேரத்திலும், பிற சீன கார் உற்பத்தியாளர்கள் இதேபோன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் போட்டி இருந்தபோதிலும் டெஸ்லா இதை சீனாவில் அறிமுகப்படுத்தாமல் தாமதம் செய்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் FSD எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து ஒரு பயனர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், குறிப்பிட்ட வெளியீட்டு தேதியை வெளிப்படாமல், "இது மிக விரைவில் சாத்தியமாகும்" என்று தெரிவித்துள்ளார்.