அக்டோபர் 17ல் வெளியாகிறது அப்டேட் செய்யப்பட்ட டாடா சஃபாரி மற்றும் டாடா ஹேரியர்
இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட சஃபாரி மற்றும் ஹேரியர் எஸ்யூவி மாடல்களை வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ். இந்த அப்டேட்டட் மாடல்களுக்கான முன்பதிவை கடந்த வாரமே அந்நிறுவனம் தொடங்கவிட்டது. குடும்பத்தினர் பயன்படுத்தும் எஸ்யூவியாக சஃபாரியையும், இளம் தலைமுறையைக் கவரும் விதமாக ஹேரியரையும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நிலைநிறுத்தி விற்பனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். 2019ம் ஆண்டு ஹேரியரை அந்நிறுவனம் முதன் முதலில் அறிமுகப்படுத்தி நிலையில், தற்போது வரை ஒரு லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. அதேபோல், 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சஃபாரியின் மாடலின் 46000 வாகனங்களையும் டாடா மோட்டார்ஸ் தற்போது வரை விற்பனை செய்திருக்கிறது.
என்னென்ன மாற்றங்களைப் பெறவிருக்கின்றன சஃபாரி மற்றும் ஹேரியர் எஸ்யூவிக்கள்:
முழுவதும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முகப்புடன் புத்துணர்வு பெறவிருக்கிறது சஃபாரி. முகப்பு விளக்குகள், ஃபாக் விளக்குகள் மற்றும் டிஆர்எல்களும் கூட புதிய வடிவமைப்பைப் பெறவிருக்கின்றன. அதேபோல் ஹேரியரிலும் வெளிப்புற டிசனை சற்று மாற்றி வடிவமைத்திருத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். மஸ்குலரான டிசனை விடுத்து ஸ்போர்ட்டியான டிசைனை ஹேரியருக்கு கொடுக்கவிருக்கிறது அந்நிறுவனம். வெளிப்புற டிசனைப் போலவே உட்புற டிசனை மற்றும் வசதிகளிலும் சில பிரதான மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். புதிய வசதிகள் பலவற்றை அப்டேட்ட மாடல்களில் கொடுக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். இன்ஜினைப் பொருத்தவரை எந்த மாற்றமும் இன்றி, தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜினுடனேயே இரண்டு கார்களின் அப்டேட்டட் மாடல்களும் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.