2045க்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை கொண்ட நிறுவனமாக மாற டாடா மோட்டார்ஸ் இலக்கு
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், 2045 ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடையும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை விரைவில் அடைய, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது. ஏற்கனவே டாடா மோட்டார்ஸ், எலக்ட்ரிக் கார் சந்தையில் டியாகோ , டைகோர் மற்றும் நெக்சன் மாடல்களுடன் முன்னணியில் உள்ளது. வரும் ஆண்டுகளில் அதிக மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனத்தை தயாரிக்கும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் உள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் ஹைட்ரஜன் எரிபொருளை உள்ளடக்கிய முதல் வாகனத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது, இந்த கண்டுபிடிப்புகளை உருவாக்க மற்றும் செயல்படுத்த ஒரு இறுக்கமான காலக்கெடுவில் வேலை செய்கிறது. மேலும், ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளை கொண்ட என்ஜின்கள் மூலம், அதன் பூஜ்ஜிய-உமிழ்வு நோக்கங்களை மேம்படுத்த பரிசீலித்து வருகிறது. பேட்டரி மின்சாரம் அல்லது எரிபொருள் செல் மின்சார விருப்பங்களை ஆராய்வதற்கு முன் ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜின்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 2045 ஆம் ஆண்டுக்குள் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தில் பூஜ்ஜிய உமிழ்வை கொண்ட நிறுவனமாக மாறும் திட்டத்தைக் கொண்டுள்ளது.