இந்தியாவில் வெளியானது டாடாவின் புதிய 'நெக்ஸான்' மற்றும் 'நெக்ஸான்.ev' ஃபேஸ்லிஃப்ட்கள்
இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். 2020ம் ஆண்டு நெக்ஸானின் முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டது டாடா. தற்போது அதனைத் தொடர்ந்து இறண்டாவது ஃபேஸ்லிஃப்டை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான கர்வ் கான்செப்ட் எஸ்யூவி மற்றும் ஹேரியர் கான்செப்ட் EV மாடல்களின் டிசைன்களை அடிப்படையாகக் கொண்ட டிசைனை புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டில் கொடுத்திருக்கிறது டாடா. வெளிப்பக்க டிசைன் மாற்றத்தைப் போலவே, உள்பக்கமும் பல்வேறு டிசனை மாற்றங்களோடு, புதிய வசதிகள் சிலவற்றையும் நெக்ஸானில் அளித்திருக்கிறது டாடா. முக்கியமாக உள்பக்கம் சென்டர் கன்சோலில் பிசிக்கல் பட்டன்களைத் தவிர்த்து, டச்சை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட டிசைன் வழங்கப்பட்டிருக்கிறது.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்: இன்ஜின் மற்றும் வசதிகள்
இன்ஜினைப் பொருத்தவரை புதிய நெக்ஸானில் டாடா எந்த மாற்றமும் செய்யவில்லை. 120hp பவர் மற்றும் 170Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 115hp பவர் மற்றும் 260Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களையே பெற்றிருக்கிறது புதிய நெக்ஸான். இந்த இன்ஜின்களுடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பெட்ரோல் இன்ஜின் மட்டும் கூடுதலாக, 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் தேர்வுகளையும் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ரூ.8.10 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என்ற தொடக்க விலையில் வெளியாகியிருக்கிறது புதிய டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்.
டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்:
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டுடன், நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்டையும் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது டாடா. டிசைன் மாற்றம் மற்றும் கூடுதல் வசதிகள் மட்டுமின்றி கூடுதல் ரேஞ்சை அளிக்கும் வகையிலும் புதிய நெக்ஸான் EV ஃபேஸ்ஃலிப்டை மேம்படுத்தியிருக்கிறது டாடா. மேலும், நெக்ஸான் EV என்ற பெயரையும் இனி நெக்ஸான்.ev என்றே குறிப்பிடவிருக்கிறது டாடா. எரிபொருள் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டைப் போலவே, எலெக்ட்ரிக் நெக்ஸானுக்கான டிசனையும் கர்வ் கான்செப்ட் காரிலிருந்தே வடிவமைத்திருக்கிறது டாடா. உள்புறம், பல்வேறு புதிய வசதிகளை உள்ளடக்கிய 12.3 இன்ச் டச்ஸ்கிரீன், இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் நேவிகேஷன் டிஸ்பிளேவுடன் கூடிய 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது.
டாடா நெக்ஸான்.ev ஃபேஸ்லிஃப்ட்: எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி மற்றும் விலை
MR மற்றும் LR என இரண்டு ட்ரிம்களில், 5 வேரியன்ட்களாக விற்பனை செய்யப்படவிருக்கிறது புதிய நெக்ஸான்.ev ஃபேஸ்லிஃப்ட். MR ட்ரிம்மானது 30kWh பேட்டரியையும், LR ட்ரிம்மானது 40.5kWh பேட்டரியையும் பெற்றிருக்கிறது. MR ட்ரிம்மானது 325 கிமீ ரேஞ்சையும், LR ட்ரிம்மானது 465 கிமீ ரேஞ்சையும் கொண்டு வெளியாகியிருக்கிறது. மேலும், MR ட்ரிம்மில் 129hp பவரை உற்பத்தி செய்யக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரும், LR ட்ரிம்மில் 145hp பவரை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் புதிய நெக்ஸான்.ev-யை ரூ.14.74 லட்சம் முதல் ரூ.19.94 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.