Loading...
செப்டம்பரில் சுஸூகி 1.34 லட்சம் பைக்குகள் விற்பனை; ஏற்றுமதி 41% எகிறியது
சுஸூகி மோட்டார்சைக்கிள் விற்பனை 8% உயர்வு

செப்டம்பரில் சுஸூகி 1.34 லட்சம் பைக்குகள் விற்பனை; ஏற்றுமதி 41% எகிறியது

எழுதியவர் Sekar Chinnappan
Oct 05, 2026
03:12 pm

செய்தி முன்னோட்டம்

சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் 2026 செப்டம்பர் மாதத்திற்கான தங்களது வாகன விற்பனைப் புள்ளிவிவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 1.34 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் விற்பனையான 1.24 லட்சம் யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 8 சதவீத வளர்ச்சியாகும். உள்நாட்டு விற்பனை மற்றும் சர்வதேச ஏற்றுமதி ஆகிய இரண்டும் இந்த சிறப்பான விற்பனை உயர்வுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன.

ஏற்றுமதி அதிகரிப்பு

ஏற்றுமதியில் 41% பிரம்மாண்ட வளர்ச்சி மற்றும் உள்நாட்டு விற்பனை

நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையானது 3 சதவீதம் அதிகரித்து 1.06 லட்சத்தில் இருந்து 1.09 லட்சம் யூனிட்களாக உயர்ந்துள்ளது.

அதேவேளையில் சர்வதேச சந்தைக்கான ஏற்றுமதி 41 சதவீதம் என்ற பிரம்மாண்ட வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2025 செப்டம்பரில் 17,664 யூனிட்களாக இருந்த ஏற்றுமதி, தற்போது 24,882 யூனிட்களாக உயர்ந்து சுஸூகியின் மொத்த விற்பனை அளவை அதிகரிக்க உதவியுள்ளது.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையொட்டி தங்களது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களுக்கான வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்வதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

உதிரி பாகங்கள் விற்பனை

உதிரி பாகங்கள் பிரிவில் சாதனை வருவாய்

வாகன விற்பனை தவிர்த்து, உதிரி பாகங்கள் பிரிவிலும் சுஸூகி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் உதிரி பாகங்கள் வணிகத்தின் மூலம் ரூ.111.2 கோடி (1,112 மில்லியன்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இது 2025 செப்டம்பரில் ஈட்டப்பட்ட ரூ.88.1 கோடியை விட 26 சதவீதம் கூடுதலாகும்.

நிறுவனத்தின் வரலாற்றிலேயே பதிவான மிக அதிகபட்ச மாதாந்திர உதிரி பாக வருவாய் இதுவாகும்.

உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் ஆகிய இரண்டின் கூட்டுப் பங்களிப்பால் இந்த அபார வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.

ADVERTISEMENT

புதிய மாடல்கள்

ஜிக்சர் மாடல்கள் மற்றும் ஹயாபுசா ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தங்களது பிரபலமான ஜிக்சர், ஜிக்சர் SF, ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் SF 250 FFV ஆகிய பைக் மாடல்களைப் புதிய வண்ண விருப்பங்களுடன் சுஸூகி நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.

மேலும், பிரீமியம் ரக சுஸூகி ஹயாபுசா ஸ்பெஷல் எடிஷன் பைக்கையும் ரூ.19.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இந்தியாவில் களமிறக்கியுள்ளது.

இந்த பைக் பிரத்யேக பர்ல் விகோர் ப்ளூ நிறம், தனித்துவமான கிராபிக்ஸ், ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ் மற்றும் 3D சுஸூகி லோகோவுடன் அதிநவீன தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT