ஜப்பானைச் சேர்ந்த ஸ்கைடிரைவ் நிறுவனத்துடன் பறக்கும் கார்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சுஸூகி
எரிபொருள் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய வேளையிலேயே, பறக்கும் கார்களும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆம், சுஸூகி மோட்டார் நிறுவனமானது ஜப்பானைச் சேர்ந்த ஸ்கைடிரைவ் என்ற பறக்கும் கார் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வரும் நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் கார்களை உற்பத்தி செய்வதற்கான கூட்டறவு ஒப்பந்தம் ஒன்றில் கையழுத்திட்டிருக்கிறது. பறக்கும் கார்களை நிஜமாக்கும் முயற்சியில் இது அடுத்த படியாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டிற்குள் (2024) பறக்கும் காரின் தயாரிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கின்றன இந்நிறுவனங்கள். 'ஸ்கைடிரைவ்' (SD-05 வகை) என்ற பறக்கும் காரையே முதலில் தயாரிக்கவும் அந்நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவிலும் பறக்கும் கார்கள் விற்பனை செய்யப்படுமா?
ஜப்பானில் மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் தங்களுடைய பறக்கும் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஸ்கைடிரைவ். அவற்றுள் இந்தியாவும் அடக்கம். ஆம், இந்தியாவிலும் தங்களுடைய பறக்கும் காரை அறிமுகப்படுத்தும் திட்டத்தை வைத்திருக்கிறது ஸ்கைடிரைவ். வாகன நெரிசலுக்கு மாற்றான ஒரு வழிமுறையை வழங்கவும், எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கவுமே பறக்கும் கார்களை உருவாக்கத் தொடங்கின பல்வேறு நிறுவனங்கள். சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், தங்களுடைய புதிய பறக்கும் காரின் மாதிரியை டெட்ராய்டு ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தியிருந்தது. தற்போது இரு ஜப்பானிய நிறுவனங்கள் பறக்கும் கார் தயாரிப்பை சாத்தியப்படுத்த ஒப்பந்தம் செய்திருக்கின்றன. ஆட்டோமொபைலின் எதிர்காலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அது பறக்கும் கார்களாகவும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.