வாகன காப்பீடு இல்லையென்றால் பெட்ரோல், டீசல் கிடையாது: உச்ச நீதிமன்றம் புதிய திட்டம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் காப்பீடு செய்யப்படாமல் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும், செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க மறுக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு வாரியம் (IRDAI) மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இணைந்து இதற்கான முன்னோடித் திட்டத்தை விரைந்து தயாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இயங்கும் வாகனங்களில் சுமார் 56 சதவீத வாகனங்கள் (சுமார் 16.54 கோடி வாகனங்கள்) எவ்வித காப்பீடும் இன்றி இயக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
இணைப்பு
ANPR கேமராக்கள் மற்றும் மொபைல் ஆப் இணைப்பு
சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி எண் பலகை கண்டறியும் கேமராக்களை VAHAN மற்றும் இன்சூரன்ஸ் தரவுத்தளங்களுடன் இணைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் தானாக கண்டறியப்பட்டு மின்னணு சலான் அனுப்பப்படும்.
மேலும், போக்குவரத்து காவல்துறையினர் களத்தில் நேரடியாகச் சோதனையிட ஏதுவாக பிரத்யேக மொபைல் செயலிகள் வழங்கப்படும்.
காப்பீட்டுக் காலம்
புதிய வாகனங்களுக்கான காப்பீட்டுக் காலம் அதிகரிப்பு
புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கான கட்டாய மூன்றாம் நபர் காப்பீட்டுக் காலம் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய கார்களுக்கு 3 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. அதேபோல புதிய இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
விபத்து காலங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரணம் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் இத்தகைய தொழில்நுட்ப அடிப்படையிலான நடவடிக்கைகள் அவசியம் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.