இறக்குமதி செய்யப்படும் கார்களின் மீதான வரியைக் குறைக்க புதிய திட்டம்!
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைப்பதற்கு இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு (SIAM) ஒப்புக் கொண்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையைக் கொண்டிருக்கும் இந்தியா தான், இறக்குமதி செய்யப்படுவதற்கான கார்களுக்கு அதிகளவில் வரியை விதிக்கும் நாடாகவும் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 60% முதல் 100% வரை இறக்குமதி வரி வதிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிபட்சமாக 46,200 கார்களுக்கு 10% வரை படிபடியாகக் குறைக்க வர்ததகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் முன்மொழிவு செய்திருக்கிறது SIAM. தேவை ஏற்பட்டால் இறக்குமதி வரியை முற்றிலுமாக 0% குறைக்கவும் அந்த முன்மொழிவில் குறிப்பிட்டிருக்கிறது SIAM.
இதனால் என்ன ஆகும்?
மேலே குறிப்பிட்டிருக்கும் 46,200 கார்களைத் தவிர்த்து அடுத்த 10 ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்படு கார்களின் மீதான வரியை 30%-ஆகக் குறைக்க வேண்டும் எனவும் SIAM கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. உலகாளாவிய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தயாவின் ஆட்டோமொபைல் சந்தைக்கான வாயிலைத் திறந்து விடுவதற்கான ஒரு வழியாகவே இந்த இறக்குமதி வரிக்குறைப்பு முன்மொழியப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கார்களின் அளவு மிகக் குறைவு, இதனால் பெரிய அளவில் முதலீடுகளையோ அல்லது பெருநிறுவனங்களின் வரவையோ எதிர்பார்க்க முடியாது என நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். கடந்த காலாண்டில் மட்டும் 40 லட்சம் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், மேலே முன்மொழியப்பட்டிருக்கும் திட்டம் பெட்ரோல்/டீசல் இன்ஜின் கொண்ட கார்களுக்கு மட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.