மாருதியின் முதல் கார் மாருதி 800-க்கு வயது 40
இந்தியாவில் அனைவருக்குமான காராக, பல பத்தாண்டுகளாக தயாரிப்பில் இருந்து விடைபெற்ற, ஆனால் இன்றும் பலருடைய கேரேஜை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மாருதி 800 கார் வெளியாகி நேற்றோடு (டிசம்பர் 14) 40 ஆண்டுகள் ஆகிறது. ஆம், மாருதி சுஸூகியின் முதல் கார் மாருதி 800. மாருதி சுஸூகியாவதற்கு முன்பு மாருதி உத்யோக் லிமிடெட் நிறுவனத்திலிருந்து வெளியான முதல் கார். இந்தக் காரை உருவாக்கியதில் இந்திரா காந்தியின் இளைய புதல்வன் சஞ்சய் காந்திக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. மாருதியை சஞ்சய் காந்தி தலைமையேற்று நடத்திய போது தான் மாருதி 800 காருக்கான விதை ஊன்றப்பட்டது.
அனைவரும் வாங்கக்கூடிய கார்:
இந்தியாவில் அனைத்து மக்களும் வாங்கக்கூடிய காராக மாருதி 800-ஐ உருவாக்க நினைத்தார் சஞ்சய் காந்தி. 8,000 ரூபாய் விலையில் ஒரு புதிய கார் (ரூ.1 லட்சத்திற்குள் நானோ என்பது போல) என்பது தான் மாருதி 800-ன் முதல் புள்ளியாக இருந்திருக்கிறது. 1972ம் ஆண்டே மாருதி 800 மாடலின் மாதிரியையும் உருவாக்கி விட்டிருந்தார்கள். ஆனால், அப்போது மேற்கு பாகிஸ்தானை, பாகிஸ்தானிடமிருந்து பிரிக்க பங்களாதேஷ் விடுதலைப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால், இந்திய அரசு மற்றும் சுஸூகி நிறுவனத்தின் கூட்டு நடவடிக்கையின் கீழ் இயங்கி வந்த மாருதி நிறுவனத்தின் மூலம் புதிய கார் தயாரிப்பு என்பது சாத்தியமில்லாமல் போனது.
முதல் மாருதி 800:
1980-ம் ஆண்டு துரதிர்ஷ்ட விதமாக சஞ்சய் காந்தி ஒரு விமான விபத்தில் உயிரிழந்து விட்டார். அவர் உயிரிழந்ததிலிருந்து மூன்றாவது ஆண்டு, 1983-ல் மாருதியின் முதல் காராக இந்தியாவில் களமிறங்குகிறது மாருதி 800. ஆனால், விலை ரூ.8,000 இல்லை, ரூ.16,700. எனினும், அன்றைய நிலையில் மிகவும் விலை குறைவான காராகவே அது இருந்தது. மாருதி 800-க்கு அடுத்தபடியாக விலை குறைவாக இருக்கும் காரின் விலை, அதனை விட ரூ.5,000 அதிகமாகவே இருந்திருக்கிறது. அன்று தொடங்கி அடுத்த 30 ஆண்டுகளுக்கு, 2014 வரை மாருதி 800-ன் உற்பத்தி நிற்கவேயில்லை. நல்ல மைலேஜ் மற்றும் பெரும்பாலானோர் வாங்கக்கூடிய விலை என இந்தியாவில் பல லட்சம் மாருதி 800 விற்றுத் தீர்ந்தது வரலாறு.