டெல்லியில் இருந்து கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டது இந்த ஆண்டின் 'ஹிமாலயன் ஒடிசி' பயணம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 19-ம் ஆண்டு 'ஹிமாலயன் ஒடிஸி' பயணம் டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் இருந்து இன்று கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பைக் ரைடர்களைக் கொண்டு ஹிமாலயன் ஒடிசி பயணத்தை நடத்தி வருகிறது ராயல் என்ஃபீல்டு. இந்த ஆண்டும் உலகம் முழுவதுமிருந்து 75 பைக் ரைடர்கள் இந்த பயணத்திகுத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று டெல்லியில் தொடங்கும் இந்த பயணம், அடுத்த 18 நாட்களுக்கு 3,050 கிலோமீட்டர்களுக்கு நீளவிருக்கிறது. கடினமான பாறைகள நிறைந்த பகுதிகள் தொடங்கி, உயரமான மலைகள் வரை மிகவும் கடினமாக பாதையில் இந்த வருட ரைடர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.
எங்கு தொடங்கி, எங்கே முடிகிறது இந்த ஆண்டு ஹிமாலயன் ஒடிசி?
டெல்லியில் தொடங்கும் இந்தப் பயணமானது முதலில் ஜம்மூ காஷ்மீர் வழியே பயணிக்கிறது. அங்கே கார்கில் போர் நினைவிடத்தில், அந்தப் போரில் உயிர் துறந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து லே பகுதியை நோக்கி பயணமாகவிருக்கிறது. லேயை அடைந்தவுடன், அங்கிருந்த பைக் பயணிக்கும் பாதையைக் கொண்ட உயரமான மலைப்பகுதியான உம்லிங் லாவின் வழி செல்கிறது. அங்கிருந்து பேங்காங் சோ, நூபுறு பள்ளத்தாக்கு மற்றும் சர்ச்சூ பாதை வழியாகப் பயணம் செய்து முதலில் மணாலியையும் அதனைத் தொடர்ந்து சண்டிகரில் பயணம் நிறைவடைகிறது. இந்தப் பயணத்தின் பாதை மட்டுமல்லாது, காலநிலையும் ரைடர்களுக்கு சவாலான ஒன்றாகவே இருக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.